Shreyas Iyer: கோடிகளில் ஏலம்.. ஆனா ”பொய்யா சொல்றாருப்பா”, ஸ்ரேயாஸ் அய்யரை கிழித்து தொங்கவிட்ட முன்னாள் வீரர்
Shreyas Iyer KKR: கொல்கத்தா அணி நிர்வாகம் தன்னிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என, ஸ்ரேயாஸ் அய்யர் பொய் சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Shreyas Iyer KKR: கொல்கத்தா அணி நிர்வாகம் தன்னிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற, ஸ்ரேயாஸ் அய்யரின் கருத்துக்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
ஸ்ரேயாஸ் அய்யர் சொல்வது என்ன?
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக அபாரமாக செயல்பட்டு, கொல்கத்தா அணி சாம்பின் பட்டம் வெல்ல வழிவகுத்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, மெகா ஏலத்திற்கு முன்பாக அவர் கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கோப்பையை வென்று கொடுத்த கேப்டனையை வெளியேற்றியது நல்ல முடிவா? எனவும் பல கேள்விகள் எழுந்தன. இருப்பினும் மெகா ஏலத்தில் ரூ.26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சப் அணியால் ஸ்ரேயாஸ் அய்யர் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்நிலையில் கொல்கத்தா அணியின் முடிவு தொடர்பாக அண்மையில் பேசிய ஸ்ரேயாஸ் அய்யர், “கொல்கத்தா அணியில் நான் இருந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பல மாதங்களாக தக்கவைப்பது பற்றி அணி நிர்வாகம் உறுதியான முயற்சி செய்யாததால் குழப்பம் அடைந்தேன். இருதரப்புக்கும் தொடர்பு இல்லாத சூழல் பிரிவதற்கு வழிவகுத்தது” என ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.
”பொய் சொல்லும் ஸ்ரேயாஸ்” - ஆகாஷ் சோப்ரா
ஸ்ரேயாஸ் அய்யரின் கருத்து தொடர்பாக தனது யூடியூப் பக்கத்தில் பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “கொல்கத்தா அணியின் கடந்த காலத்தைப் பார்ப்போம். நீங்கள் உரிமையாளர்களை விரும்பலாம் அல்லது விரும்பவில்லை. கொல்கத்தா அணி தங்களது கோர் அணியை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தது. ஆண்ட்ரே ரசல் அல்லது சுனில் நரைன் எப்போதும் கொல்கத்தா உடன் இருந்துள்ளனர். வெங்கடேஷ் அய்யரை தக்கவைக்க முடியாத நிலையில் ஏலத்தில் அவரை தங்கள் வசப்படுத்தியது. இது உறவுகளில் முதலீடு செய்யும் உரிமையாகும்.
ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருந்தார். அவர் தக்கவைப்பு வீரர்களின் பட்டியலில் இருந்திருக்க வேண்டும். ஆனால், கொல்கத்தா அணி நிர்வாகம் தன்னிடம் பேசவில்லை என அண்மையில் பேசி இருந்தார். ஆனால், கொல்கத்தா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இடையே பேச்சுவார்த்தை நடந்ததை என்னால் உறுதிப்படுத்த முடியும். அவர்கள் நீண்ட நேரம் உரையாடினார்கள். உடன்பாடு ஏற்படவில்லை. இது ஒரு தனி பிரச்சினை. ஆனால், எந்தவித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்கிறார் ஸ்ரேயாஸ். சில முரண்பாடுகள் உள்ளன. பேச்சு வார்த்தை நடந்ததை என்னால் உறுதிப்படுத்த முடியும். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன'' என்றார்.
பஞ்சாப் கேப்டனாக ஸ்ரேயாஸ்
ஐபிஎல், ரஞ்சி கோப்பை, இரானி கோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றதன் மூலம் ஸ்ரேயாஸ் 2024ல் வெற்றிகரமான வீரராக திகழ்ந்தார். அதன் தொடர்ச்சியாக, அவர் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மேலும் ஐபிஎல்லில் கோப்பையையே வெல்லாத ஒரு அணியை , முதல் பட்டத்திற்கு வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




















