'குட்கா நல்லதில்லங்க' முதல்நாள் குட்கா பாய்...! மறுநாள் குட் பாய்...! இது கிரிக்கெட் வைரல்!
கான்பூர் டெஸ்ட் போட்டியில் முதல்நாள் குட்கா மென்று சமூகவலைதளங்களில் வைரலான இளைஞர், மறுநாள் குட்காவிற்கு எதிரான பதாகையுடன் மைதானத்திற்கு வந்திருந்தார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் அமைந்துள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாளான நேற்று முன்தினம் இந்திய ரசிகர் ஒருவர் போட்டியை ரசிக்க வந்திருந்தார். அவர் அப்போது, தனது வாயில் குட்கா எனப்படும் புகையிலை மென்றுகொண்டு, தனது செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார்.
Seldom do we find the people and places living up to their name. 😁#KanpurTest #INDvNZ pic.twitter.com/kHafw8jimP
— Daya sagar (@DayaSagar95) November 25, 2021
புகையிலை பொருட்கள் உடல்நலத்திற்கு மிகவும் தீங்கானது என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சூழலில். சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெறும் மைதானம் ஒன்றில் இளைஞர் ஒருவர் இவ்வாறு குட்கா மெல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்ததுடன் பல்வேறு கேள்விகளையும், கருத்துக்களையும் பதிவிட்டனர். இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலான அதே நபர் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று மைதானத்தின் வெளியே ஒரு பதாகையுடன் காத்திருந்தார். அவர் ஏந்தியிருந்த பதாகையில் “குட்கா மெல்லுவது உடல்நலத்திற்கு தீங்கானது” என்று எழுதப்பட்டிருந்தது. கிரிக்கெட் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் குட்கா மென்றது தவறு என்பதை உணர்ந்த அவர், தனது தவறை திருத்திக் கொள்ளும் விதமாக இந்த பதாகையுடன் நின்றார். தற்போது, இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூகவலைதளங்களில் வைரலான அவர் பெயர் சோபித் பாண்டே. தொழிலதிபரான அவர் தனது தங்கையுடன் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்தபோது, அவர் மைதானத்தில் குட்கா மென்று கொண்டு போட்டியை ரசித்துக்கொண்டிருந்தபோது போட்டியை ஒளிபரப்பிய கேமராவில் அவர் சிக்கினார். பின்னர், அவரை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பல வகையில் உருவாக்கப்பட்டது.
கான்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்களை எடுத்துள்ளது. தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடி வரும் நியூசிலாந்து நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை எடுத்துள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்