SL vs BAN: 147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் இது முதல்முறை.. புதிய சாதனை படைத்த கமிந்து மெண்டீஸ்..!
தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் அரைசதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் மெண்டிஸ் படைத்துள்ளார்.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நெற்று வங்கதேசம் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற இன்னும் 464 ரன்கள் தேவை என்று விளையாடி வருகிறது. இதேவேளையில், 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எவராலும் சாதிக்க முடியாத சாதனையை இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார்.
வரலாறு படைத்த கமிந்து மெண்டிஸ்:
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய கமிந்து மெண்டிஸ் களமிறங்கினார். ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்த அவர் முதல் இன்னிங்ஸில் 102 ரன்கள் எடுத்தார். மேலும், தனஞ்சய் டி சில்வாவுடன் இணைந்து 202 ரன்கள் பார்ட்னஷிப் அமைத்தார். இரண்டாவது இன்னிங்ஸில், மெண்டிஸ் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார். அப்போது கமிந்து மெண்டிஸ் 164 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7 அல்லது அதற்கும் குறைவான இடத்தில் பேட்டிங் செய்து இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார். இது தவிர, தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் அரைசதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் மெண்டிஸ் படைத்துள்ளார். கமிந்து மெண்டிஸ் தான் விளையாடிய முதல் டெஸ்டிலும் 61 ரன்கள் எடுத்தார்.
A failed attempt by Khaled Ahmed to run out Kamindu Mendis at the non striker's end.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 24, 2024
- Peak Sri Lanka Vs Bangladesh rivalry. 🔥pic.twitter.com/OuIrDqqLPJ
இவரைத் தவிர இலங்கை அணியின் கேப்டன் தனஞ்சய் டி சில்வாவும் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையை மெண்டிஸ் மற்றும் டி சில்வா பெற்றுள்ளனர். இவர்களுக்கு முன், கடந்த 1974ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் கிரெக் மற்றும் இயன் சேப்பல் ஆகியோர் சதம் அடித்தனர். 2014 ஆம் ஆண்டு, மிஸ்பா உல்-ஹக் மற்றும் அசார் அலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த சாதனையை படைத்தனர். முதல் இன்னிங்சில் 202 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 173 ரன்களும் மெண்டிஸ் மற்றும் டி சில்வா இடையேயான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இலங்கை vs வங்கதேசம் டெஸ்ட் போட்டியின் நிலைமை என்ன..?
இலங்கை முதல் இன்னிங்சில் 280 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வங்கதேச முதல் இன்னிங்சில் 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. கமிந்து மெண்டிஸ் மற்றும் தனஞ்சய் டி சில்வா ஆகியோரின் சதங்கள் மற்றும் கருணாரத்னவின் அரை சதத்தினால் இலங்கை மூன்றாவது இன்னிங்ஸில் 418 ரன்களை எடுத்தது. தற்போது வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற 454 ரன்கள் தேவை என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.