ஜெயிச்சுட்டோம் மாறா மொமண்ட்.! தனிமை.. தனிமையே.! - வைரலாகும் ஜிம்மி நிஷமின் போட்டோ!!
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்தின் வெற்றிக்கு காரணமான ஜிம்மி நீஷமும் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலககோப்பை டி20 தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதன்முறையாக உலககோப்பை டி20 வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தவிர எந்தவொரு சர்வதேச சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றாத நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்னறனர். இந்த நிலையில், இங்கிலாந்து நிர்ணயித்த இலக்கை நியூசிலாந்து அணி எட்டியதும் பெவிலியனில் அமர்ந்திருந்த நியூசிலாந்து அணியின் வீரர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கின்றனர்.
ஆனால், நேற்றைய போட்டியில் நியூசிலாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ஜிம்மி நீஷம் முகத்தில் எந்தவொரு மகிழ்ச்சியும், ஆர்ப்பரிப்புமோ இல்லை. அவர் அப்படியே அமைதியாக ஏதோ ஒரு சிந்தனையில் அமர்ந்துள்ளார். ஒட்டுமொத்த நியூசிலாந்து வீரர்களும் ஆர்ப்பரிக்க ஜிம்மி நீஷம் மட்டும் சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதபோல, போட்டி முடிவடைந்த பிறகு ஜிம்ம நீஷம் மட்டும் தனியாக பெவிலியனில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பலரும் பதிவிட்டு பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜிம்மி நீஷம் அமைதியாக அமர்ந்திருக்க அதே புகைப்படத்தில் மற்றொரு மூலையில் நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனும் மிகவும் அமைதியாக புன்னகையுடன் மட்டுமே அமர்ந்துள்ளார். அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், மார்டின் கப்தில், கிளென் பிலிப்ஸ் விக்கெட்டுகளை விரைவாக இழந்தாலும் டேரில் மிட்செல், கான்வே மற்றும் ஜிம்மி நீஷமின் பொறுப்பான ஆட்டத்தில் 19வது ஓவரிலே வெற்றி பெற்றது.
குறிப்பாக, கடைசி கட்டத்தில் 5வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஜிம்மி நீஷம் 11 பந்தில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 27 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அவரது கடைசி கட்ட அதிரடியாலே நியூசிலாந்து முதல்முறையாக உலககோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், ஜிம்மி நீஷம் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்