T20 World Cup: 2024 டி20 உலகக் கோப்பைக்கும் ரோஹித் சர்மாவே கேப்டன் - ஜெய் ஷா திட்டவட்டம்..!
ரோஹித் ஷர்மாவின் பெயரை கேப்டனாக கேட்டவுடன் அவரது முகம் மலர்ந்தது. அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், முகமது சிராஜ் ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 வருகின்ற ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 20 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியானது ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது.
கிட்டத்தட்ட ஒரு மாதம் நடக்கும் இந்த போட்டியானது ஜூன் 29ம் தேதி பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியுடன் முடிவடைகிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை சந்திக்கிறது, அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசாப் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய அணி மோதுகிறது.
கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மா:
டி20 உலகக் கோப்பை 2024 தொடங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளது. இந்தநிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நேற்று சௌராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரரான நிர்ஜன் ஷானின் பெயர் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது உரையின் கடைசி 34 வினாடிகளில், இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிப்பதாக அறிவித்தார்.
என்ன சொன்னார் ஜெய் ஷா..?
நிகழ்ச்சியில் பேசிய ஜெய் ஷா, ”இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்றிருந்தாலும், இறுதிப்போட்டியில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், சிறப்பாக செயல்பட்டதன்மூலம் மக்களின் மனதை வென்றோம். 2024 டி20 உலகக் கோப்பை பார்படாஸில் (இறுதிப் போட்டி நடைபெறும் இடம்), ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று கொடியை நாட்டும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
ரோஹித் ஷர்மாவின் பெயரை கேப்டனாக கேட்டவுடன் அவரது முகம் மலர்ந்தது. அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், முகமது சிராஜ் ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.
2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டி தோல்விக்குப் பிறகு, விராட் கோலி மற்றும் ரோஹித் போன்ற அனுபவபேட்ஸ்மேன்கள் விளையாட விருப்பம் தெரிவித்தனர்.
கந்தேரியில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் ஜெய் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த ஸ்டேடியத்திற்கு தற்போது முன்னாள் கிரிக்கெட் நிர்வாகி நிரஞ்சன் ஷா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், அனில் கும்ப்ளே, ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் இந்திய அணியின் துணைப் பணியாளர்கள் சிலர் பங்கேற்றனர். இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சேதேஷ்வர் புஜாரா, ஜடேஜா, ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.