Jasprit Bumrah: உசுர கொடுத்து விளையாடிய பும்ரா, கல்தா கொடுக்கும் பிசிசிஐ ..! புதிய டெஸ்ட் துணை கேப்டன் யார்?
Jasprit Bumrah: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் பதவி, வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிற்கு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

Jasprit Bumrah: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக இளம் வீரரை நியமிக்க பிசிசிஐ ஆலோசிக்கறதாம்.
ஜஸ்பிரித் பும்ராவிற்கு கல்தா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் ஜுன் 20ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரானது அடுத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுக்கான, இந்திய அணியின் முதல் தொடராகும். இதற்கான வீரர்களின் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை-கேப்டனாக செயல்படமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
பறிக்கப்படும் பும்ராவின் பதவி?
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா செயல்பட்டார். அந்த தொடரில் இந்தியா பெற்ற ஒரே ஒரு வெற்றியும் இவரது தலைமையின் கீழ் தான் கிடைத்தது. சிட்னியில் நடைபெற்ற தொடரின் கடைசி போட்டியில் இருந்து ரோகித் விலகிய நிலையில், அந்த போட்டியிலும் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் தான் பணி சுமை காரணமாக, இங்கிலாந்து தொடரின் அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக துணை கேப்டன் பதவிக்கு தொடர் முழுவதும் விளையாடக்கூடிய இளம் வீரரை நியமிக்க தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆலோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் அகர்கரின் ஆலோசனை என்ன?
பிசிசிஐக்கு தேர்வுக்குழு வழங்கியுள்ள அறிக்கையில், “தொடரின் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடக்கூடிய ஒருவரையே துணை கேப்டனாக நியமிக்க விரும்புகிறோம். பும்ரா 5 போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்பதால் அவருக்கு அந்த பதவியை வழங்கி, ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு துணை கேப்டனை நியமிக்க முடியாது. எனவே கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதிவி வகிப்பவர்கள், 5 போட்டிகளிலும் விளையாடக்கூடியவர்களாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுப்மன் கில் Vs ரிஷப் பண்ட்:
கூடுதல் தகவல்களின்படி, ரோகித்தின் ஓய்விற்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்துவதற்கு ஏற்ற நபரை மனதில் வைத்துக்கொண்டு புதிய துணை கேப்டனை நியமிக்க தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது எதிர்கால கேப்டனை உருவாக்கும் நோக்கில் புதிய துணை கேப்டன் நியமிக்கப்பட உள்ளார். அதன்படி பார்த்தால், சுப்மன் கில் மற்றும் ரிஷ பண்ட் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். இந்திய அணி வென்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், சுப்மன் கில் துணை கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.
பும்ராவின் காயங்கள்:
பும்ரா அடுத்தடுத்து காயமடைவது பிசிசிஐ நிர்வாகத்தை கவலையடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது காயமடைந்த அவர், ஜனவரி இரண்டாவது வாரத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் கூட அவர் பங்கேற்கவில்லை. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டும் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, 11 மாதங்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருந்தார். அந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் கூட பும்ரா பங்கேற்கவில்லை.




















