Jasprit Bumrah: கரையே இல்லா காட்டாறு - சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி பும்ரா அசத்தல்
Jasprit Bumrah: பும்ரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பும்ரா. இவர் ப்ளேயிங் லெவனில் இருக்கின்றார் என்றாலே எதிரணியினருக்கு கொஞ்சம் ‘கிலி’-ஆகத்தான் இருக்கும். தனது அபாரமான பந்து வீச்சினால் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனுக்கும் தண்ணி காட்டும் வல்லமை படைத்த பும்ரா தற்போது சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளார். இதுவரை 34 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 64 இன்னிங்ஸில் பந்து வீசியுள்ளார். இப்படியான நிலையில் இவர் இதுவரை 152 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த சாதனையை பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியபோது போனஸாக பும்ராவின் கணக்கில் வந்து சேர்ந்துள்ளது.
BUMRAH BAMBOOZLED STOKES...!!! 🥶
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 3, 2024
- The reaction of Stokes says it all.pic.twitter.com/ZhhqXxvh83
பும்ரா தனது 150வது விக்கெட்டாக பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து ஒற்றை ஆளாக போராடி இந்திய அணிக்காக சிறப்பான இன்னிங்ஸ் ஆடினார்.
அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 253 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராவ்லி 78 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்தார். சிறப்பாக விளையாடி வந்த இவர் அக்ஷர் பட்டேல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். சாக் கிராவ்லியைத் தவிர்த்து மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ் மேன்கள் தொடங்கி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரை அனைவரும் ஓரளவுக்கு தாக்குபிடித்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸரும் விளாசி 47 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 55.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டும் சேர்த்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
பும்ராவின் பந்து வீச்சில், இங்கிலாந்து அணியின் மிகவும் முக்கியமான பேட்ஸ்மேன்களான ஒல்லி போப், ஜோ ரூட், பேரிஸ்ட்ரோவ், பென் ஸ்டோக்ஸ், டாம் ஹார்ட்லி மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொத்தம் 15.5 ஓவர்கள் பந்து வீசிய பும்ரா 5 ஓவர்கள் மெய்டனாக வீசி அசத்தியுள்ளார். இதுமட்டும் இல்லாமல், 45 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். இதன் மூலம் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள பும்ரா 152 ரன்கள் கைப்பற்றியுள்ளார்.
இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடிவருகின்றது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ஜெய்ஸ்வால் 15 ரன்களும் ரோகித் சர்மா 13 ரன்களும் சேர்த்த நிலையில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி தற்போது 171 ரன்கள் முன்னிலை வகிக்கின்றது.