Sanju Samson: சஞ்சு சாம்சனை எங்கள் நாட்டிற்காக விளையாட அழைத்தோமோ..? அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் பதில் என்ன..?
சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டிற்காக விளையாட அழைத்ததாக வெளியான தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், அவரை தங்கள் நாட்டிற்காக வந்து ஆடுமாறு அயர்லாந்து அணி அழைப்பு விடுத்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தது.
சஞ்சு சாம்சனை அழைத்தோமோ..?
இந்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்ததாக வெளியான தகவல் போலி என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ்கீடா என்ற விளையாட்டு நாளிதழ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி. இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் எந்த அழைப்பையும் விடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்க மறுத்து வருவதால் சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டிற்கு குடிபெயர்ந்து தங்கள் நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்ததாகவும், அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை சஞ்சு சாம்சன் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், பி.சி.சி.ஐ. மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்பு:
அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அளித்துள்ள விளக்கத்தால் தற்போது இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் தனது திறமையை பல முறை நிரூபித்தும், ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்தும் சஞ்சு சாம்சனுக்கு அணியில் நிலையான இடம் கிடைக்காதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழலில்தான், சாம்சனுக்கு அயர்லாந்து கிரிக்கெட் அணி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது. வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் பலவற்றிலும் வேறு, வேறு நாட்டு வீரர்கள் ஆடி வருகின்றனர். 2019ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் பெரும்பாலோனார் வெளிநாட்டில் பிறந்து இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றவர்கள். சமீபத்தில் கூட சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வாகி ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வளர்ந்து வரும் பெரும்பாலான நாடுகளில் இந்தியாவைப் பூர்வீகமாக் கொண்ட பலர்தான் அந்தந்த நாடுகளுக்காக கிரிக்கெட் ஆடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.