Dhoni Replacement: தோனிக்கு பதில் இனி இவர்தான்.. சிஎஸ்கே-வின் புதிய விக்கெட் கீப்பர் ரெடி?
சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக சாம்சன் இடம்பெற உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே ஆடி வரும் சென்னை அணி அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அணிகளில் ஒன்றாகும். அதற்கு முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி.
தோனியின் இடத்தில் யார்?
சென்னை அணியின் நட்சத்திர வீரரான தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் ஆடுவாரா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஏனென்றால், தோனிக்கு தற்போது 44 வயதாகிவிட்ட நிலையில் அவரது ப்ளேயிங் ஆர்டர் மற்றும் உடற்தகுதி கடந்த இரண்டு சீசன்களாக கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

சாம்சன்:
இந்த சூழலில், தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்ஸ்மேன் இடத்திற்கு தகுதியான ஒரு நபரை சென்னை அணி தேடி வருகிறது. தோனியின் இடத்தை நிரப்புவது இயலாத காரியம் என்றாலும், தோனியைப் போல திறமையான ஒரு வீரரை சென்னை அணி நிர்வாகம் தேடி வருகிறது. அதன்படி, தோனிக்கு பதிலாக சஞ்சு சாம்சனை சென்னை அணி எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சஞ்சு சாம்சன் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். அவர் ராஜஸ்தான் அணியில் இருந்து விலக உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. கடந்த 2 சீசன்களாக இந்த தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், அடுத்த சீசன் முதல் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்காக ஆடுவார் என்று தகவல் வெளியாகி வருகிறது.
சிஎஸ்கே ரிலீஸ் செய்த போட்டோ:
இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. சென்னை அணியின் தற்போதைய கேப்டனாக ருதுராஜ் உள்ளார். தோனி ஆடாவிட்டால் விக்கெட் கீப்பிங், பேட்டிங் திறமை கொண்டவர்களில் அவருக்குப் பதிலாக மாற்றான வீரர்களில் சாம்சன் முதன்மையான இடத்தில் உள்ளார். மேலும், சாம்சனுக்கு கேப்டன்சி அனுபவமும் உள்ளது.

மினி ஏலம்:
ஐபிஎல் மினி ஏலத்தில் இது நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. நடப்பாண்டில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சன் இதுவரை 176 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 172 இன்னிங்சில் ஆடி 4 ஆயிரத்து 704 ரன்களை எடுத்துள்ளார். 26 அரைசதங்கள், 3 சதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 119 ரன்கள் எடுத்துள்ளார்.
தற்போது 30 வயதான சாம்சன், தோனிக்கு பதிலாக சென்னை அணியில் இடம்பிடித்தால் குறைந்தது அடுத்த 6 ஆண்டுகள் வரை விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால், சென்னை அணிக்கு ஒரு 6 ஆண்டுகள் நிரந்தரமான வீரர் கிடைப்பார்.




















