INDW vs AUSW: தொடரை வெல்லும் கனவு தகர்ந்தது.. மூன்றாவது போட்டியிலும் தோல்வியை சந்தித்த இந்திய மகளிர் அணி..!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் தொடரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெல்லும் இந்திய அணியின் கனவு தகர்ந்தது. இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு, இந்திய அணி இலக்காக 148 ரன்கள் நியமித்திருந்த நிலையில், அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றினர். முதல் டி20யில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை தொடங்கிய நிலையில், கடைசி இரண்டு டி20களில் ஆஸ்திரேலிய அணியினர் வெற்றி பெற்றனர்.
#TeamIndia fought hard but it's Australia who win the T20I series decider.
— BCCI Women (@BCCIWomen) January 9, 2024
Scorecard ▶️ https://t.co/nsPC3lefeg#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/5f0B2yHtZR
அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் சிறப்பான ஆட்டம்:
இந்திய அணி எடுத்த147 ரன்களுக்கு பதிலுக்கு கொடுக்கும் விதமாக பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தை எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்து ஆட்டத்தின் போக்கையை மாற்றினர். அலிசா ஹீலி, பெத் மூனி இருவரும் அரைசதங்கள் அடித்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை திணற வைத்தனர். அலிசா ஹீலி 38 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பெத் மூனி 45 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய விக்கெட் தஹிலா மெக்ராத் 15 பந்துகளில் 20 ரன்களிலும், ஆலிஸ் பாரி ரன் ஏதுமின்றி பெவிலியன் திரும்பிய போதிலும், ஃபோபோ லிச்ஃபீல்ட் 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார்.
இந்திய அணியின் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரகர் 3.4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மேலும், தீப்தி சர்மா 1 விக்கெட் எடுத்திருந்தார். அதேசமயம் ரேணுகா சிங் தாக்கூர், டைட்டட் சாது, ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோரால் விக்கெட் எதையும் வீழ்த்த முடியவில்லை.
இந்திய பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஏமாற்றம்:
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச முடிவு செய்தார். அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஜோடி 4.4 ஓவரில் 39 ரன்கள் சேர்த்தது. ஆனால் அதன் பிறகு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்களை விட்டுகொடுத்து பெவிலியன் திரும்பினர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 பந்துகளில் 34 ரன்களும், ஷெபாலி வர்மா 17 பந்துகளில் 26 ரன்களும் எடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து, ஸ்மிருதி மந்தனா 28 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடி அமன்ஜோத் கவுர் கடைசி ஓவரில் 17 ரன்கள் சேர்த்தார். இருப்பினும், ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்ற அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஏமாற்றம் அளித்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இது தவிர மேகன் ஷட் மற்றும் ஆஷ்லே கார்டனர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.