Women's WC Prize Money: யப்பா, இவ்வளவு பரிசுத் தொகையா.?! இந்திய மகளிர் அணிக்கு குவியும் கோடிகள்; மொத்தம் எவ்வளவு தெரியுமா.?
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ள இந்திய அணிக்கு கோடிகள் குவிந்து வருகின்றன. ஆம், போட்டி பரிசுத்தொகை அல்லாமல், அதைவிட அதிகமான கோடிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. மொத்தம் எவ்வளவு?

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நேற்று நவி மும்பையில் நடைபெற்றது. இதில், 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர். இந்த நிலையில், ஏராளமான பரிசுத் தொகைகளையும் வென்று, இந்திய மகளிர் அணி கோடிகளில் குறித்து வருகிறது. மொத்தம் எத்தனை கோடிகள் தெரியுமா.? பார்க்கலாம்.
மொத்தமாக சுமார் ரூ.123 கோடிகளை பரிசாக வென்ற இந்திய மகளிர் அணி
மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, மொத்தமாக சுமார் 123 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் வென்றதற்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) பரிசுத் தொகையாக 4.48 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 39.78 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
இதேபோல், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து 2-ம் இடம் பிடித்த தென்னாப்பிரிக்க அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், அரையிறுதியில் தோல்வியடைந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு தலா 9.3 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், புள்ளிப் பட்டியலில் 5-வது மற்றும் 6-வது இடங்களை பிடித்த இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு தலா 5.8 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, 7-வது இடம் பிடித்த வங்கதேச அணிக்கு 2.3 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
அதே சமயம், தொடரில் பங்கேற்ற ஒவ்வொரு அணிக்கும், தொடருக்கான ஊதியமாக தலா 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.51 கோடி பரிசை அறிவித்த பிசிசிஐ
இந்நிலையில், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என மொத்தமாக அனைவருக்கும் சேர்த்து 51 கோடி ரூபாயை பரிசாக அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ).
ஆக மொத்தத்தில், இந்த தொடரின் மூலம் இந்திய அணிக்கு 13.88 அமெரிக்க டாலர்கள், அதாவது, இந்திய மதிப்பில் 123 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது.
இது, கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட 297 சதவீதம் அதிகம் என கூறப்பட்டுள்ளது. இது, மகளிர் கிரிக்கெட்டிற்கு மிகப் பெரிய ஊக்கமாக கருதப்படுகிறது.
இதில் மேலும் குறிப்பிடத்தக்க விஷயமாக, பிசிசிஐ செயலாளராக இருந்தபோதும், தற்போது ஐசிசி தலைவராக இருக்கும்போதும், மகளிர் கிரிக்கெட்டை ஆடவர் கிரிக்கெட்டிற்கு இணையாக கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வரும் ஜெய்ஷா, கடந்த மாதம் தான் மகளிருக்கான பரிசுத் தொகையை 300 சதவீதம் அதிகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















