Video : கடைசி ஒருநாள் போட்டிக்காக ட்ரினிடாட் சென்ற இந்திய வீரர்கள்! காத்திருந்து வரவேற்ற பிராவோ..
தொடர் முடிந்து அமெரிக்காவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கையோடு, இந்திய அணி வீரர்களை சந்திக்க ஹோட்டலுக்கு வந்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்னதாக திங்கள்கிழமை டிரினிடாட்டில் உள்ள ஹோட்டலுக்கு இந்திய அணி வீரர்கள் வருகை தந்தபோது, இந்திய வீரர்களை மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ மற்றும் அவரது சிறிய மகன் இருவரும், வரவேற்றனர்.
இந்திய வீரர்களை வரவேற்ற பிராவோ
கேப்டன் ரோகித் சர்மா உட்பட அனைத்து இந்திய வீரர்களும் டுவைன் பிராவோ மற்றும் அவரது மகனுடன் வந்து பேசிவிட்டு கட்டிப்பிடித்து கைகொடுத்து சென்றனர். சமீபத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் பதிப்பில் ஆடிய ஆல்-ரவுண்டர், தொடர் முடிந்து அமெரிக்காவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கையோடு, இந்திய அணி வீரர்களை சந்திக்க ஹோட்டலுக்கு வந்துள்ளார். இந்திய அணி வீரர்கள் மீதான அவரது அன்பு சமூக ஊடகங்களில் பல இதயங்களை வென்றது.
When in Trinidad 🇹🇹... 🤝#TeamIndia | #WIvIND | @DJBravo47 pic.twitter.com/dBublUKGGz
— BCCI (@BCCI) August 1, 2023
கோலி மட்டும் இல்லை
பிசிசிஐ பகிர்ந்துள்ள வீடியோவில், பிராவோ க்ரீம் கலர் டி-சர்ட் அணிந்து இந்திய வீரர்களுடன் பேசுவதைக் காணலாம். பிராவோ தனது முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். தற்செயலாக, 3வது ஒருநாள் போட்டிக்கு அணி வீரர்களுடன் அல்லாமல் முன்னதாகவே டிரினிடாட் வந்தடைந்த விராட் கோலி அந்த வீடியோவில் இடம்பெறவில்லை.
முதல் போட்டியில் வென்ற இந்திய அணி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இதுவரை பரபரப்பாக நடந்து வருகிறது. தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இன்று அணிகள் ஆடுகின்றனர். பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, மேற்கிந்திய தீவுகள் வெறும் 23 ஓவர்களில் 114 ரன்களுக்கு சுருண்டது. சில இடையூறுகள் இருந்தபோதிலும், இந்தியா 22.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
இரண்டாவது போட்டியில் அதிர்ச்சி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ்
இரண்டாவது ஒருநாள் போட்டியில் வியத்தகு திருப்பம் ஏற்பட்டது. ஆசிய கோப்பைக்கு முன்னதாக செய்த ஒரு சோதனை உத்தியின் ஒரு பகுதியாக, தங்கள் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளித்து ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்கிய இந்திய அணிக்கு முதல் போட்டியில் தந்த வைத்தியத்தை திருப்பி தந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. மேற்கிந்தியத் தீவுகள் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. குடகேஷ் மோட்டி மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய பேட்டிங் வரிசையை வீழ்த்தினர். தற்போது இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் தலா ஒரு வெற்றியுடன் தொடரை சமன் செய்துள்ளது. எனவே இந்திய நேரப்படி இன்று மாலை 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சை செய்யும் என்று தெரிகிறது.