Virat Kohli | காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதம்மா- விராட் கோலியும், சர்வதேச சதமும்...
இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்து 743 நாட்களுக்கு மேலாகியுள்ளது.
![Virat Kohli | காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதம்மா- விராட் கோலியும், சர்வதேச சதமும்... Indian Captain Virat Kohli not scored international century for more than 2 years Virat Kohli | காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதம்மா- விராட் கோலியும், சர்வதேச சதமும்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/56d07b840569c92fe35c16590efeeab6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இந்திய அணி தொடக்கத்தில் சற்று நன்றாக விளையாடினாலும் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 274/7 என்ற ஸ்கோர் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து இன்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்காத விராட் கோலி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் ரன் எதுவும் அடிக்காமலும் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுடனும் விராட் கோலி ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் அடிக்காமல் இரண்டு ஆண்டுகளை விராட் கோலி நிறைவு செய்துள்ளார்.
சதம் அடிக்காத விராட் :
இந்திய கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதற்கு பின்பு 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 599 ரன்கள் அடித்துள்ளார். அதில் வெறும் 5 முறை மட்டும் அரைசதம் கடந்துள்ளார். மேலும் 4 முறை டக் அவுட்டும், 4 முறை ஒற்றை இலக்க ஸ்கோருடனும் கோலி அவுட் ஆகியுள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சதம் கடந்து 743 நாட்களுக்கு மேலாகியுள்ளது.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை அதிலும் விராட் கோலி சமீபத்தில் சதம் அடிக்கவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். அந்தப் போட்டியில் விராட் கோலி 114* ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் தற்போது 27 மாதங்களாக விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி தற்போது வரை 43 சதங்கள் அடித்துள்ளார்.
ஆண்டு வாரியாக விராட் கோலியின் ஒருநாள் சதங்கள்:
ஆண்டு | கோலி அடித்த சதங்கள் |
2009 | 1 |
2010 | 3 |
2011 | 4 |
2012 | 5 |
2013 | 4 |
2014 | 4 |
2015 | 2 |
2016 | 3 |
2017 | 6 |
2018 | 6 |
2019 | 5 |
2020 | 0 |
2021 |
0 |
கடைசியாக அவர் 2019-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் 5 சதங்கள் அடித்தார். அதன்பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சதம் கூட அடிக்காதது பெரிய வருத்தமாக அமைந்துள்ளது. இனி இந்தாண்டில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி உள்ளது. வரும் டிசம்பர் 26ஆம் தேதி தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது அதிலாவது விராட் கோலி சதம் அடிப்பாரா? என்ற ஏக்கம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் படிக்க: ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் யார்? யார்? தெரியுமா... ! முழு பட்டியலும் உள்ளே...!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)