IND Vs AUS 3rd ODI: மீண்டும் ரோஹித், கோலி; சிட்னியில் சட்னியான ஆஸி. - கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரன 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் மற்றும் கோலியின் அபார ஆட்டத்தால், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் ஷர்மா சதமடித்த நிலையில், 74 ரன்களை குவித்தார் விராட் கோலி. இந்த ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
முதலில் ஆடி 236 ரன்கள் ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில், 29 ரன்களை எடுத்திருந்த நிலையில் முகமது சிராஜின் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ட்ராவிஸ் ஹெட். இதைத் தொடர்ந்து மேட் ஷார்ட் களமிறங்கினார். இந்நிலையில், மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்ஷ் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அக்ஸர் படேலின் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து, மேட் ரென்ஷா களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த மேட் ஷார்ட், 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தரின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து, விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி களமிறங்கினார். ஆனாலும், 24 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கூப்பர் கன்னோலி களமிறங்கினார்.
இந்நிலையில், மறுமுனையில் அரை சதத்தை பூர்த்தி செய்து சிறப்பாக ஆடிவந்த ரென்ஷா, வாஷிங்டன் சுந்தரின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, கூப்பருடன் ஓவன் ஜோடி சேர்ந்த போதிலும், ஒரே ரன் மட்டுமே எடுத்து ஹர்ஷித் ராணாவின் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மிட்செல் ஸ்டார்க்கும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, கூப்பருடன் எல்லிஸ் ஜோடி சேர்ந்தார். எனினும், அவரும் 16 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, 23 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த கூப்பர் ஹர்ஷித் ராணாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஹேசில்வுட்டும் ரன் எடுக்காமல் ஹர்ஷித் ராணாவின் பந்தில் போல்டாகி ஆட்டமிழக்க, கடைசியில் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 236 ரன்களை எடுத்தது. ஆடம் ஜாம்ப்பா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய தரப்பில், ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், மற்ற 4 பவுலர்களும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
ரோஹித், கோலியின் அபாரத்தில் இந்தியா அசத்தல் வெற்றி
இதைத் தொடர்ந்து 237 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய தொடர்க்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மாவும் சுப்மன் கில்லும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், 24 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்த ஜோடி பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு அபார வெற்றியை தேடித் தந்தது. ரோஹித் ஷர்மா அபாரமான ஆடி சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 125 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முறுமுனையில் அவருக்கு பக்கபலமாக அசத்தலாக, பழைய பாணியில் ஆடிய விராட் கோலி, அரை சதத்தை பூர்த்தி செய்து, 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 38.3 ஓவர்களில், ஒரே விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி, 237 ரன்களை எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை, 2 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.




















