IND vs WI: 200வது சர்வதேச போட்டியில் களமிறங்கும் இந்திய அணி... அதிரடியில் ஆதிக்கம் செலுத்திய விராட்-ரோஹித்!
இந்திய அணி இன்று தனது 200வது டி20 போட்டியில் களமிறங்குகிறது. இந்திய அணி இதுவரை 200 டி20 போட்டிகளில் விளையாடி 127 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியானது இந்திய அணிக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம், இந்திய அணி இன்று தனது 200வது டி20 போட்டியில் களமிறங்குகிறது. இந்திய அணி இதுவரை 200 டி20 போட்டிகளில் விளையாடி 127 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
ஒவ்வொரு அணிக்கு எதிராக இந்திய அணியின் ஆதிக்கம்:
இந்திய அணி இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிடாக 25 டி20 போட்டிகளில் விளையாடி 17 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதிகபட்சமாக இலங்கைக்கு எதிராக இந்திய அணி இதுவரை 29 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 19 போட்டிகளில் வெற்றியும், 9 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது.
அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 26 போட்டிகளில் விளையாடி 15ல் வெற்றியும், நியூசிலாந்துக்கு எதிராக 25 போட்டிகளில் 12 வெற்றி மற்றும் 10 தோல்வியை சந்தித்துள்ளது.
டி20யில் மிரட்டும் கோலி:
இந்திய அணிக்காக அதிக டி20 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை கோலி தற்போதுவரை தனதாக்கி வைத்துள்ளார். இதுவரை 115 போட்டிகளில் (105 இன்னிங்ஸ்கள்) 4008 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 37 அரைசதங்களும் அடங்கும். மேலும், இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும், டி20யில் இந்திய அணிக்காக அதிக பவுண்டரிகள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் கோலி வைத்துள்ளார். அதன் அடிப்படையில், கோலி 356 பவுண்டரிகள் அடித்து முதலிடத்தில் உள்ளார். உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக டி20யில் விளையாடியபோது அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருதுகளைப் பெற்றவர் விராட் கோலி.
அதிரடியில் ஆதிக்கம் செலுத்தும் ரோஹித்:
இந்திய அணிக்காக அதிக டி20 சதங்கள் அடித்தவர், இந்தியாவுக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமை எல்லாம் ரோகித் படைத்துள்ளார். இவர் இதுவரை இவர் 148 போட்டிகளில் 3853 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 4 சதங்களும் 29 அரை சதங்களும் அடங்கும். ரோஹித்தின் சிறந்த டி20 ஸ்கோர் 118 ரன்கள். அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேனும் இவரே. இதுவரை 182 சிக்சர்களை அடித்துள்ளார்.
எவ்வாறாயினும் இன்று இந்திய அணி விளையாடும் 200வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியாவே தலைமை தாங்குவார். ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இந்த டி20 தொடரில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டி20 அணி
யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், திலக் வர்மா .
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி
கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷாய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், அகில் ஹுசைன், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய், ஓஷேன் தாமஸ், பிராண்டன் கிங், ஓடியன் ஸ்மித், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட். .