(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs WI 1st T20I: 200வது போட்டியில் 150 ரன்களை அடிக்க முடியாமல் இந்தியா தோல்வி.. மேற்கிந்திய தீவுகள் த்ரில் வெற்றி
இந்திய அணிக்கு எதிரான டி-20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு எதிரான டி-20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சுற்றுப்பயணம்:
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனவும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று அசத்தியது. குறிப்பாக ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மற்றும் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் இந்திய அணி களமிறங்கி தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் தான், 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடங்கியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்:
டிரினிடாட் அண்ட் டொபாகோவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரரான கைல் மேயர்ஸ் 1 ரன்னிலும், அவரை தொடர்ந்து வந்த சார்லஸ் 3 ரன்களிலும் நடையை கட்டினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கிங் 28 ரன்களை சேர்த்து நடையை கட்டினார்.
நம்பிக்கை தந்த பூரன் - போவல்”
நான்காவது விக்கெட்டிற்க்யு ஜோடி சேர்ந்த பூரன் மற்றும் கேப்டன் போவல் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். அதன்படி, பூரன் 41 ரன்களையும், போவெல் 48 ரன்களையும் குவித்தனர். ஹெட்மேயர் வெறும் 10 ரன்களை மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும், பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.
இலக்கை துரத்திய இந்தியா:
தொடர்ந்து, 150 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கில் 3 ரன்களிலும், இஷான் கிஷான் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பொறுப்புடன் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 21 ரன்களிலும், நேற்றைய போட்டி மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான இளம் வீரரான திலக் வர்மா 39 ரன்களையும் சேர்த்து பெவிலியன் திரும்பினர். இதனால் 11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை சேர்த்து இருந்தது.
அபாரமான பந்துவீச்சு:
இதையடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் வந்த வேகத்திலேயே நடையை கட்டினர். இதனால், இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், வெறும் 5 ரன்களை மட்டுமே சேர்த்து, இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தோல்வியுற்றது. இது, இந்திய அணி களமிறங்கிய 200வது டி-20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனால், 5 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.