India vs Sri Lanka: இந்தியா - இலங்கை டி20.. சுப்மன் கில் அணியிலேயே இருக்கக்கூடாது! பிசிசிஐ கடுமையாக தாக்கிய ஸ்ரீகாந்த்
சுப்மன் கில் இந்திய டி20 அணியிலேயே இருக்கக் கூடாது. இந்திய அணியின் காம்பினேஷனை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இந்தியா - இலங்கை:
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ நேற்று (ஜூலை 18) அறிவித்திருந்தது. பிசிசிஐ வீரர்களை தேர்ந்தெடுத்ததில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதோடு இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் பிசிசிஐ-க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக உலகக் கோப்பையின் போது இந்திய அணியின் துணைக்கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை நீக்கி விட்டு சுப்மன் கில்லை துணைக்கேப்டனாக நியமித்தது சர்ச்சையாக வெடித்துள்ளது.
சுப்மன் கில் வேண்டாம்:
இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பேசுகையில், "இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பையை துணைக் கேப்டனாக இருந்து ஹர்திக் பாண்டியா வென்றுள்ளார். துணைக் கேப்டன் பதவியில் இருந்தும் ஹர்திக் பாண்டியாவை நீக்கி இருக்கிறார்கள். தேர்வுக் குழுவினர் இந்த அணுகுமுறை ஹர்திக் பாண்டியாவை அவமரியாதை செய்வது போல் இருக்கிறது. என்னை பொறுத்தவரை சுப்மன் கில் இந்திய டி20 அணியிலேயே இருக்கக் கூடாது. இந்திய அணியின் காம்பினேஷனை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது. இந்திய டி20 அணியின் துணைக் கேப்டன் பதவிக்கோ அல்லது இந்திய டி20 அணியில் வீரராகவோ இடம்பெற சுப்மன் கில்லுக்கு தகுதி இல்லை.
ருதுராஜ் கெய்க்வாட் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். உலகக்கோப்பை தொடரிலேயே சுப்மன் கில் தடுமாறிக் கொண்டிருந்தார். அதேபோல் ஸ்பின்னராக ரவி பிஷ்னாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தினார். சுப்மன் கில்லுக்கு ஏதோ நல்ல நேரம் இருக்கிறது. தேர்வு குழுவினரிடம் எந்த சிந்தனையும் இல்லை என்று புரிகிறது.
சுப்மன் கில்லுக்கு நல்ல ராசி
சுப்மன் கில் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்பது போல் காட்டுகிறார்கள். இன்னும் அதற்கான திறமையை அவர் வெளிப்படுத்தவில்லை. ஜிம்பாப்வே டி20 தொடரில் விக்கெட் விடக் கூடாது என்பதில் தான் சுப்மன் கில் தெளிவாக இருந்தார். ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட வீரர்கள் இன்னும் உழைப்பை கொடுத்து இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டியுள்ளது. சுப்மன் கில்லுக்கு நல்ல ராசி இருக்கிறது. சிவம் துபே மற்றும் ரியான் பராக் எப்படி ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதே புரியவில்லை" என்று கூறியுள்ளார்.