IND vs SA 1ST TEST DAY 3 : 327 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா..! சொன்னதை செய்துகாட்டிய லுங்கி நிகிடி..!
IND vs SA 1st TEST : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 327 ரன்களுக்கு சுருண்டுள்ளது. இன்று மட்டும் 54 ரன்களுக்கு இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சதமடித்த தொடக்க வீரர் கே.எல்.ராகுல் முதல் விக்கெட்டாக வெளியேறினார். அவர் 260 பந்தில் 16 பவுண்டரி 1 சிக்ஸருடன் 123 ரன்கள் எடுத்த நிலையில், ரபாடா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் முன்னாள் துணை கேப்டன் ரஹானேவும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் லுங்கி நிகிடியின் பந்தை பவுண்டரிக்கு அனுப்ப நினைத்து விளாச, அது விக்கெட் கீப்பர் குயின்டின் டி காக் கைகளில் தஞ்சம் அடைந்தது. அவர் 102 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் இந்தியா போராடி 300 ரன்களை கடந்தது. அடுத்து அஸ்வினும், ரிஷப் பண்டும் ஜோடி சேர்ந்தனர். அஸ்வின் அனுபவமிக்க ஆல்ரவுண்டர் என்பதாலும், ரிஷப் பண்ட் நல்ல பேட்ஸ்மேன்் என்பதால் நல்ல கூட்டணியை அமைப்பார்கள் என்ற இந்திய ரசிகர்களுக்கு இருவரும் ஏமாற்றத்தையே பரிசாக அளித்தனர்.
அணியின் ஸ்கோர் 296 ரன்களை எட்டியபோது 5 பந்துகளில் 4 ரன்களை எடுத்திருந்த அஸ்வின் ரபாடா பந்தில் மகாராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலே ரிஷப் பண்ட் 13 பந்தில் 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்து லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார்.
இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்திய டெயிலண்டர்கள் இந்த போட்டியில் வருவதும், போவதும் என்று நடையை கட்டுவதுமாக இருந்தனர். அதிரடியாக ஆடக்கூடிய ஷர்துல் தாக்கூர் வந்தவுடன் ஒரு பவண்டரியை விளாசினார். ஆனால், பவுண்டரி விளாசிய சில நிமிடங்களில் குயின்டின் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரையும் ரபாடா வெளியேற்றினார். முகமது ஷமி 8 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ராவும், முகமது சிராஜூம் சிறிது நேரம் இணைந்து ஆடினர். அவர்கள் 19 ரன்களை கடைசி விக்கெட்டுக்கு சேர்த்தனர். கடைசியில் இந்திய அணி 105.3 ஓவர்களில் 327 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி சிறப்பாக பந்துவீசி 24 ஓவர்களில் 5 மெய்டன்களை வீசி 71 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரபாடா 26 ஓவர்களில் 72 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்கோ ஜான்சேன் 1 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டமான இன்று மட்டும் இந்திய அணி 54 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி இந்தியாவை 350 ரன்களுக்குள் சுருட்டுவோம் என்று கூறியிருந்தார். அவர் கூறியதுபோலவே, இந்தியா 350 ரன்களுக்குள் சுருண்டுள்ளது. அவர் அபாராமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள்ளார். தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை கேப்டன் டீன் எல்கர் விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்