India vs Pakistan Innings Highlights: தொடக்கத்தில் திண்டாட்டம்;ஹர்திக் -இஷானால் கொண்டாட்டம்; பாகிஸ்தானுக்கு 267 ரன்கள் இலக்கு..!
India vs Pakistan Innings Highlights: ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கப்பட்ட ஆசியக் கோப்பைத் தொடரின் குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது இந்தியா பாகிஸ்தான் போட்டிதான்.
India vs Pakistan Innings Highlights: ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கப்பட்ட ஆசியக் கோப்பைத் தொடரின் குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது இந்தியா பாகிஸ்தான் போட்டிதான். அந்த போட்டி இன்று அதாவது செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையில் உள்ள பல்லேகேலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் இன்னிங்ஸை ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் துவங்கினர்.
குறுக்கிட்ட மழை
போட்டி துவங்கி 4.2 ஓவர்களில் மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி 15 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விக்கெட்டை அடுத்தடுத்த ஓவரில் கைப்பற்றினார் அஃப்ரிடி. அதன் பின்னர் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாட முயற்சி செய்து தனது விக்கெட்டை ஹாரிஸ் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
சொதப்பிய டாப் ஆர்டர்
அதன் பின்னர் தொடக்கம் முதல் தடுமாறிக்கொண்டு இருந்த சுப்மல் கில் ஹாரிஸ் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் இந்திய அணியின் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி தத்தளித்துக் கொண்டு இருந்த இந்திய அணியை மெல்ல மெல்ல மீட்டனர். இவர்களது பார்ட்னர்ஷிப் அமையும் வரை இந்திய அணி 66 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வந்தது.
இஷான் கிஷன் - ஹர்திக் பாண்டியா
அதன் பின்னர் இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வலுவான நிலைக்கு முன்னேற்றினர். குறிப்பாக இருவரும் மாறி மாறி அரைசதம் கடந்து சதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கையில் 80 ரன்களைக் கடந்த நிலையில் இருவரும் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
இஷான் கிஷன் 82 ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 87 ரன்களிலும் தங்களது விக்கெட்டை இழக்க, அதன் பின்னர் இந்திய அணியின் ரன்ரேட் குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்கள் தாக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் எழும் அளவிற்கு இருந்தது.
இறுதி 5 ஓவர்களில் இந்திய அணி தாக்குபிடிக்கவேண்டுமானால் கைவசம் உள்ள 8 விக்கெட்டுகளை இழக்காமல் ஆட வேண்டும். இப்படியான நிலையில் பும்ராவும் குல்தீப்பும் இணைந்து விளையாடினர். இவர்கள் ரன்கள் எடுப்படுதுடன் விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தனர். ஆனால் இது கைகொடுக்காததால் இறுதியில் இந்திய அணி 48.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளும், ஹாரிஸ் ராஃப் மற்றும் நிஷாம் ஷா தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.