IND vs PAK WC 2023 Match: ஒரு இரவுக்கு ஒரு லட்சம்.. இந்தியா-பாகிஸ்தான் போட்டியால் ஹோட்டல் வாடகை உயர்வு.. ஹைப் ஏறும் உலகக் கோப்பை..!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி காரணமாக அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல் அறைகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகின்ற அக்டோபர் மாதம் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. கிட்டதட்ட இந்த போட்டி தொடங்குவதற்கு இன்னும் 3 மாதங்களுக்கு மேலாக உள்ள நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி காரணமாக அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல் அறைகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
கிடைத்த தகவலின்படி, அகமதாபாத்தில் ஹோட்டல் அறைகளின் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. அதே சமயம், கடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது 50 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இப்பவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023 உலகக் கோப்பை போட்டிகளில் 5 போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா- பாகிஸ்தான் போட்டியுடன், இறுதிப் போட்டியும் இங்கு நடைபெறவுள்ளது. இதன் காரணமாகவே, அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல் அறைகள் தற்போதே புக் ஆகி வருவதாகவும், அறைகளின் விலை அதிகரித்துள்ளது.
அக்டோபர் 15ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற உள்ளதால், அறை கட்டணம் வெகுவாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 10 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாகவும், சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு அறை ஒரு இரவுக்கு கிடைக்கிறது.
சாதாரண நாட்களில் அறை விலை என்ன..?
அகமதாபாத்தில், சாதாரண நாட்களில் 5 முதல் 8 ஆயிரம் வரை சொகுடு ஹோட்டல் அறைகள் கிடைக்கும். ஆனால், தற்போது ஒரு அறையின் விலை 40 ஆயிரம் முதல் ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. Booking.com படி, ஜூலை 2 அன்று ஒரு சொகுசு ஹோட்டல் அறையின் விலை ரூ.5,699. ஆனால் அக்டோபர் 15ம் தேதி அதே ஹோட்டலின் அறை விலை ரூ.71,999 ஆக உயர்ந்துள்ளது. இன்னொரு பக்கம் இன்னொரு ஹோட்டலின் அறை வாடகை சாதாரண நாட்களில் 8 ஆயிரம் ரூபாய். ஆனால் இந்த போட்டி நாளுக்கு 9, 0679 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அகமதாபாத்தில் எப்போது போட்டிகள்?
2023 உலகக் கோப்பையில் முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 5ம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் போட்டி இங்கு நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் நவம்பர் 4 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஒரு போட்டியும், நவம்பர் 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டியும் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இரு அணிகளும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.