Watch video: மைதானத்திற்குள் புகுந்து ரோகித்சர்மாவை கட்டிப்பிடித்த சிறுவன் - அட்வைஸ் செய்து அனுப்பிய ஹிட்மேன்
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை, சிறுவன் ஒருவன் மைதானத்திற்குள் ஓடிவந்து கட்டியணைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து உடனான 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி, 2-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது. 108 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 20.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா அதிரடி:
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கில் ஒருபுறமும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ரோகித் சர்மா நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால், 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உடன், 47 பந்துகளில் அரைசதம் விளாசினார். பின்பு, 51 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
Fan Invade Pitch Huge @ImRo45 #RohitSharma #IndvsNZ2ndODI #Cricket pic.twitter.com/e0uh9iKlAx
— sportsliveresults (@Ashishs92230255) January 21, 2023
மைதானத்திற்குள் நுழைந்த சிறுவன்:
போட்டியின் 10வது ஓவரை நியூசிலாந்து அணி வீசிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சிறுவன் மைதானத்திற்குள் நுழைந்து ஓடி வந்து ரோகித் சர்மாவை அணைத்துக் கொண்டான். அப்போது, மறுமுனையில் இருந்து அதிவேகமாக ஓடிவந்த மைதான ஊழியர், அந்த சிறுவனை ரோகித் சர்மாவிடம் இருந்து பிரித்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார்.
இதனால் சற்றே தடுமாறிய ரோகித் சர்மா உடனடியாக சுதாரித்துக்கொண்டு, அந்த சிறுவனை நிதானமாக அழைத்துச் செல்லுமாறும், அவனுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என்றும், மைதான ஊழியர்களிடம் வலியுறுத்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Craze for Rohit Sharma in Raipur. pic.twitter.com/VNOVLyZmoc
— Johns. (@CricCrazyJohns) January 21, 2023
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம்:
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
2வது போட்டி
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்தனர்.
தடுமாறிய நியூசிலாந்து:
அடுத்தடுத்து நியூசிலாந்து அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 15 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 108 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி அபாரம்:
இதையடுத்து, 109 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் பொறுப்புடன் ஆடினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 47 பந்துகளில், ஒருநாள் போட்டிகளில் தனது 48வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்பு 51 ரன்கள் எடுத்து இருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ரன்களை சேர்த்தார். இதன் மூலம், வெறும் 20.1 ஓவர்கள் முடிவில் 111 ரன்களை சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது.
தொடர்ச்சியாக 7வது தொடரில் வெற்றி:
கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3- 2 என கைப்பற்றியது. அதைதொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எந்த ஒரு அணியும் ஒருநாள் தொடரை கைப்பற்றவில்லை. அதன்படி, உள்நாட்டில் நடைபெற்ற கடந்த 7 ஒருநாள் போட்டி தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.