IND vs BAN: 3 ஆண்டுகளுக்கு பின்.. சேப்பாக்கத்தில் களமிறங்கும் இந்திய அணி! வெற்றிக் கணக்கை தொடங்குமா?
கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணி சென்னையில் களம் இறங்க உள்ளது.
இந்தியா வங்கதேசம் முதல் டெஸ்ட்:
அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி தொடரை கைப்பற்றியது. ஆனால் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமான தோல்வியை சந்தித்தது. இச்சூழலில் தான் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று முன் தினம் சென்னைக்கு வந்தனர். அந்தவகையில் தற்போது வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்காளதேச அணி, முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, செப்டம்பர் 15-ம் தேதி சென்னைக்கு வர உள்ளது.
சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 23-ம் தேதி முடிவடைந்ததும், கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது வங்கதேசம். தற்போது அதே முனைப்புடன் இந்திய அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அதே நேரம் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முக்கிய கட்டத்தில் இருக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் சாதனை:
இந்தியா சென்னையில் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 வெற்றி, 7 தோல்வி, 11 டிரா, 1 டை ஆகியுள்ளது. சென்னையில் கடைசியாக 2021ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும், இந்த வெற்றிக்கு முன்னதாக, சென்னையில் நடந்த போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது.
கவனிக்கவேண்டிய சிறந்த வீரர்கள்
வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கோலி சென்னையில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், அங்கு அவர் 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 2 அரை சதம் உட்பட 267 ரன்கள் எடுத்துள்ளார்.
சென்னையில் நடக்கும் 1வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின் , ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.