India vs Bangladesh 2nd Test: முடிவுக்கு வந்த 2-ஆம் நாள் ஆட்டம்... முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் குவித்த இந்திய அணி... முன்னிலை பெறுமா வங்கதேசம்?
India vs Bangladesh 2nd Test: அதிரடியாக விளையாடி வந்த ம் ரிஷப் பண்ட் 93 ரன்களில் அவுட் ஆகி சதத்தினை தவற விட்டார்.
வங்கதேச அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்றது.
இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று டாக்கா மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் மொமினுல் ஹக் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் 157 பந்துகளை எதிர்கொண்டு 84 ரன்கள் குவித்தார். பிற வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் அவுட்டாக, வங்கதேச அணி 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது.
An exciting Day 3 awaits 🙌#WTC23 | #BANvIND | 📝https://t.co/ZTCALEDTqb pic.twitter.com/A7qVfJM6WM
— ICC (@ICC) December 23, 2022
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது. இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் 10 ரன்களும், சுப்மன் கில் 20 ரன்களும், புஜாரா, விராட்கோலி தலா 24 ரன்களும் எடுத்து அவுட்டாயினர். தொடர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஐந்தாவது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடினர்.
இருவரும் பார்ட்னர்ஷிப் போட்டு 159 ரன்கள் குவித்த நிலையில் ரிஷப் பண்ட் 93 ரன்கள் எடுத்து 7 ரன்களில் சதத்தை தவறவிட்டார். இதேபோல் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக இந்திய அணி 86.3 ஓவர்களில் 314 ரன்களில் ஆல்-அவுட்டானது. வங்கதேச அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் ஷகிப் அப் ஹசன் மற்றும் தைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 80 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், 3 நாள் ஆட்டம் மீதமிருப்பதால் வங்கதேசம் அணி முன்னிலை பெறுமா அல்லது இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.