India vs Australia T20I records: இந்தியாவே ஆதிக்கம்: ஆட்டம்காண வைக்குமா ஆஸ்திரேலியா? சில புள்ளிவிவரங்கள்!
இரு அணிகளும் தங்கள் டி20 சர்வதேச போட்டிகளின்போது பல சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர். அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டி20 வரலாறு, தென்னாப்பிரிக்காவின் டர்பனில் 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முதல் சந்திப்பில் தொடங்கியது.
கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன் பிறகு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதுவரை 26 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதிகபட்சமாக இந்திய அணி 15 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.ஒரு போட்டி முடிவு இல்லாமல் முடிந்தது.
இரு அணிகளும் தங்கள் டி20 சர்வதேச போட்டிகளின்போது பல சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர். அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அதிகபட்ச ஸ்கோர்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. கடந்த 2022 ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது முதல் டி20யில் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை பதிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் கிரீன் 30 பந்தில் 61 ரன்களும், மேத்யூ வேட் 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 45 ரன்களும் எடுத்து 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை துரத்தினர். முன்னதாக, கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 55 ரன்களும், ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ரன்களும் எடுத்ததால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 208/6 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது.
குறைந்தபட்ச ஸ்கோர்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. 2008 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதலில் பேட்டிங் செய்ய தோனி தலைமையிலான அணி 17.3 ஓவர்களில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆல்ரவுண்டர் இர்பான் பதான் 30 பந்துகளில் 26 ரன்கள் குவித்து அதிகபட்ச ரன் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் பிராக்கன் 3 விக்கெட்டுகளையும், ஆடம் வோஜஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
அதிக ரன்கள்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஆஸி.க்கு எதிராக முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி 22 டி20 போட்டிகளில் விளையாடி 52.93 சராசரியிலும் 143.84 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 794 ரன்கள் குவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் 8 அரைசதங்கள் அடித்துள்ளார் கோலி. 2016 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு இந்திய சுற்றுப்பயணத்தின் முதல் T20I இல் ஆஸிஸுக்கு எதிராக 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக விக்கெட்டுகள்:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் உள்ளார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 13 டி20 போட்டிகளில் விளையாடி 23.43 சராசரியிலும் 8.06 எகானமியிலும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் 14 டி20 போட்டிகளில் 6.93 எகானமியுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:
முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா டி20 போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஷேன் வாட்சன் 71 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 124 ரன்கள் எடுத்தார். வாட்சனின் அபாரமான சதத்தால் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 197/5 ரன்கள் எடுத்தது. இருப்பினும், இந்த போட்டியில் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி.
சிறந்த பந்துவீச்சு:
சிறந்த பந்துவீச்சு பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் முதலிடத்தில் உள்ளது. மிர்பூரில் நடந்த 2014 ஐசிசி டி20 உலகக் கோப்பை குரூப் 2 மோதலின் போது, அஸ்வின் வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவர்களில் 86 ரன்களுக்கு சுருண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது.
அதிகபட்ச பார்ட்னர்ஷிப்:
விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிக பார்ட்னர்ஷிப் செய்து சாதனையை படைத்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இந்திய அணி முதல் டி20 போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் கோலி மற்றும் ரெய்னா மூன்றாவது விக்கெட்டுக்கு 134 ரன்களை பார்ட்னர்ஷிப்பால அமைத்து 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தனர். கோலி ஆட்டமிழக்காமல் 90 ரன்களும், ரெய்னா 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்தப் போட்டியில் இந்தியா 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.