India’s squad: ரோஹித் புதிய கேப்டன்... நியூசி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கோலிக்கு அணியில் இடமில்லை!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலிக்கு இந்த தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தத் தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அனுபவ தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் டி20 உலகக் கோப்பையை போல் இந்தத் தொடருக்கும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் ஜடேஜா, பும்ரா, ஷமி உள்ளிட்டவர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் விவரம் கீழ் வருமாறு:
NEWS - India’s squad for T20Is against New Zealand & India ‘A’ squad for South Africa tour announced.@ImRo45 named the T20I Captain for India.
— BCCI (@BCCI) November 9, 2021
More details here - https://t.co/lt1airxgZS #TeamIndia pic.twitter.com/nqJFWhkuSB
ரோகித் சர்மா(கேப்டன்),கே.எல்.ராகுல்(துணை கேப்டன்),இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர்,ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சாஹல்,புவனேஸ்வர் குமார்,ஹர்சல் பட்டேல்,அவேஸ் கான், தீபக் சாஹர், முகமது சிராஜ்,அக்சர் பட்டேல்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய-நியூசிலாந்து டி20 தொடரின் முதல் போட்டி வரும் 17ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி 19ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி 21ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து பிசிசிஐ இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை.
டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். அதேபோல் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைந்துள்ளது. இதனால் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இந்தத் தொடரில் முதல் முறையாக செயல்பட உள்ளார். இந்தத் தொடரில் ஏகப்பட்ட இளம் வீரர்கள் உள்ள நிலையில் ராகுல் டிராவிட் இவர்களை எப்படி பட்டை தீட்டுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .
மேலும் படிக்க: 4 ஆண்டுகள்...பல வெற்றிகள்... ஐசிசி கோப்பை மட்டும் மிஸ்ஸிங்: ரவி சாஸ்திரியும் டீம் இந்தியாவும்! விரிவான தகவல்!