IND vs ENG: அடுத்தடுத்து விக்கெட்டுகள்! மிரட்டும் இந்திய பவுலிங்! தடுமாறும் பட்லர் பாய்ஸ்
356 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஆடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தாக்குதல் பந்துவீச்சை நடத்தி வருகிறது.

இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 356 ரன்களை குவித்தது. இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றால் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி ஆடி வருகிறது.
மிரட்டிய அர்ஷ்தீப்:
இங்கிலாந்து அணிக்காக களமிறங்கிய சால்ட் - டக்கெட் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். 6 ஓவர்களிலே 50 ரன்களை குவித்தனர். குறிப்பாக, ஹர்ஷித் ராணா பந்தில் டக்கெட் பவுண்டரிகளாக விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய டக்கெட்டை அர்ஷ்தீப்சிங் காலி செய்தார்.
அவரது வேகத்தில் டக்கெட் 22 பந்தில் 8 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் பில் சால்ட்டும் அர்ஷ்தீப்சிங் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 60 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி ஆடிய இங்கிலாந்து அணி 80 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது.
சுழல் தாக்குதல்:
அடுத்து இந்திய அணிக்காக அக்ஷர் படேலும், குல்தீப் யாதவும் சுழல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அடுத்து ஜோடி சேர்ந்த டாம் பாண்டன் - ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடினர். இருவரும் இணைந்து ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்ப டாம் பாண்டன் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
இதனால், இங்கிலாந்தின் பேட்டிங் மீண்டும் கை ஓங்கத் தொடங்கியபோது அதிரடி காட்டிய டாம் பாண்டனை குல்தீப் யாதவ் வெளியேற்றினார். அவரது சுழலில் பாண்டன் 41 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த ஜோ ரூட்டை அக்ஷர் படேல் காலி செய்தார். அக்ஷர் படேல் சுழலில் ஜோ ரூட் 24 ரன்களுக்கு அவுட்டானார்.
ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
தற்போது 23 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. கேப்டன் ஜோஸ் பட்லர் - ஹாரி ப்ரூக் ஜோடி ஆடி வருகின்றனர். இருவரும் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் என்பதால் இவர்களை விரைவில் அவுட்டாக்க இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். வெளியில் லிவிங்ஸ்டன், அட்கின்ஸன், ரஷீத் உள்ளனர்.
இந்திய அணிக்காக முன்னதாக சுப்மன்கில் சிறப்பாக பேட்டிங் செய்து 112 ரன்கள் எடுத்தார். மற்றொரு வீரரான ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக ஆடி 78 ரன்கள் எடுத்தார். நீண்ட நாட்களாக ஃபார்மில் இல்லாத விராட் கோலி 52 ரன்கள் எடுத்தார். கே.எல்.ராகுல் 40 ரன்கள் எடுக்க இந்திய அணி 356 ரன்களை எடுத்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி பெற கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முனைப்பு காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.




















