IND-W vs AUS-W: சொதப்பல் ஃபீல்டிங்..! மரண அடி அடித்த ஆஸ்திரேலியா..! இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்கு
மகளிர் டி-20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 173 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது.
மகளிர் டி-20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 173 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி:
தென்னாப்ரிக்காவின் நியூலேண்ட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. உடல்நலக்குறைவு காரணமாக தொடரில் இருந்து விலகிய பூஜா வஸ்த்ரகருக்கு பதிலாக, ஸ்னே ரானா இந்திய அணியில் களமிறங்கினார். உடல்நலக்குறைவால் விளையாடமாட்டார் என கூறப்பட்ட, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுரும் களமிறங்கினார்.
ஆஸ்திரேலியா அதிரடி:
தொடக்க வீராங்கனைகளான ஹீலி மற்றும் மூனி ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 52 ரன்களை சேர்த்தது. ஹீலி 25 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான பெத் மூனி அரைசதம் விளாசினார். பின்பு 54 ரன்கள் எடுத்து இருந்தபோது அவர் ஷிகா பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து வந்த ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 31 ரன்களை சேர்த்து தீப்தி ஷர்மா பந்துவீச்சில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் மெக் லான்னிங் 49 ரன்களை குவித்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்களை இழந்து 172 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில், ஷிகா பாண்டே இரண்டு விக்கெட்டுகளையும், தீப்தி மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
சொதப்பிய பீல்டிங்:
ஆஸ்திரேலிய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதோடு, இந்திய அணியின் மோசமான பீல்டிங்கும் இலக்கு இந்தளவிற்கு உயர முக்கிய காரணமாகும். ஒரு ரன் கூட இல்லாத இடத்தில் கூட, பந்துகளை தவறவிட்டு பவுண்டரிகளை இந்திய அணியினர் தாரைவார்த்தனர். அதோடு, இரண்டு கேட்ச்களையும் இந்திய அணியினர் கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.
ஹெட் - டு - ஹெட்:
முன்னதாக 30 போட்டிகளில் இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 22 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 7 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.