IND Vs WI 3rd T20: 7 ஆண்டு சாதனை, தொடரை தக்க வைக்குமா இந்திய அணி? மே.தீவுகளுடன் இன்று 3-வது டி20 போட்டி
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் நீடிக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம்:
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. அதில், முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியுற்றது. இதனால், தொடரில் 2-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகிக்கிறது.
3வது டி-20 போட்டி:
இந்நிலையில் தான் 3வது டி-20 போட்டி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு புரொவிடன்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற மேற்கிந்திய தீவுகள் அணியும், இன்றைய போட்டியில் வென்று தொடரில் நீடிக்க இளம் இந்திய அணியும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால், 2016ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக அந்த அணி வெல்லும் முதல் தொடராக இது இருக்கும்.
இந்திய அணியின் பிரச்னை:
இந்த தொடரில் இந்திய அணியின் முக்கிய பிரச்னையாக இருப்பது பேட்டிங் தான். டாப் ஆர்டரில் களிமிறங்கும் இஷன் கிஷன், சுபமன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை. மிடில் ஆர்டரில் களமிறங்கும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரும் சொதப்பி வருகின்றனர். இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற மேற்குறிப்பிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அதேநேரம், இந்த தொடரின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான, திலக் வர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்து வருகிறார்.
பந்துவீச்சு:
இந்திய அணியின் பந்துவீச்சு நன்றாகவே இருந்தாலும் இளம் வீரர் முகேஷ் குமார் அதிகப்படியான ரன்களை வாரி வழங்குகிறார். இதனால் இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் அல்லது உம்ரான் மாலிக் இந்திய அணியில் இடம்பெறலாம். அதேபோன்று கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டாலும், 18வது ஓவரை சாஹல் வீசாதது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இதனால், இந்த போட்டியில் பந்துவீச்சாளர்களை கேப்டன் பாண்ட்யா முறையாக பயன்படுத்த வேண்டியது கட்டாயம்.