IND vs WI 1st ODI: 1000வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்தியா! பந்துவீச்சு தேர்வு - சவால் கொடுக்குமா மேதீவு?
இந்திய கிரிக்கெட் அணி தனது 1000வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இரு அணிகளும் முதலாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்னும் சற்று நேரத்ததில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆடும் 1000வது ஒருநாள் போட்டி என்பதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க தோல்வியால் துவண்டுள்ள இந்திய அணி புதிய கேப்டன் ரோகித்சர்மா வருகையால் புத்துணர்ச்சி அடைந்துள்ளது. இந்திய தொடக்க வீரர் ஷிகர்தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் கொரோனா தொற்று தாக்குதலால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக ரோகித்சர்மாவுடன் இஷான்கிஷான் தொடங்க உள்ளார். முன்னாள் கேப்டன் விராட்கோலி தனது ஆஸ்தான இடமான மூன்றாவது வரிசையில் களமிறங்க உள்ளார்.
மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஐ.பி.எல்.லில் அசத்திய தீபக்ஹூடா, ரிஷப்பண்ட் ஆகியோர் களமிறங்க உள்ளனர். பந்துவீச்சில் முகமது சிராஜ், தீபக்சாஹர், ஷர்துல் தாக்கூர் உள்ளனர். இந்த போட்டியில் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுடன் கடந்த ஐ.பி.எல், போட்டியில் கலக்கிய தீபக்ஹூடா அறிமுக வீரராக களமிறங்குகிறார். பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Congratulations to @HoodaOnFire who is all set to make his debut for #TeamIndia. #INDvWI pic.twitter.com/849paxXNgM
— BCCI (@BCCI) February 6, 2022
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை அபாரமாக வென்ற உற்சாகத்தில் களமிறங்கியுள்ள பொல்லார்ட் தலைமையிலான அணியில் பிரண்டன் கிங், ஷாய் ஹோப், டேரன் ப்ராவோ, நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர், ஹைடன் வால்ஷ், கீமர் ரோச் என்று ஒரு நட்சத்திர இளம் பட்டாளமே உள்ளது. இதனால், இந்திய அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி மிகுந்த சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் இதுவரை 133 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அவற்றில் 64 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி 63 ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவில்லை. இந்த போட்டியில் விராட்கோலி 6 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்களை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறிப்பார். இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்