IND vs SL Womens: மந்தனா-ஷெஃபாலி சாதனை பார்ட்னர்ஷிப்... இலங்கை மகளிர் அணியை ஊதித்தள்ளிய இந்திய அணி !
இலங்கை அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியை இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியை இந்திய மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தொடக்க முதலே தடுமாறியது. 70 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. காஞ்சனா மட்டும் ஒரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் குவித்தார். இதனால் இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரேணுகா 4 விக்கெட் வீழ்த்தினார். மேக்னா சிங் மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Renuka Singh scalped 4⃣ wickets & bagged the Player of the Match award as #TeamIndia won the second #SLvIND ODI. 👏 👏
— BCCI Women (@BCCIWomen) July 4, 2022
Scorecard 👉 https://t.co/XOkhAjSAUt pic.twitter.com/YxWvZ212ed
174 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தானா மற்றும் ஷெஃபாலி வெர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிருதி மந்தனா 83 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 94* ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ஷெஃபாலி வெர்மா 71 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 71* ரன்கள் எடுத்தார். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 25.4 ஓவர்களில் 174 ரன்களை எட்டி அசத்தியது. 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. மேலும் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
அத்துடன் சேஸ் செய்யும் போது இந்திய மகளிர் அணி சார்பில் தொடக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்தச் சாதனையை தற்போது ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெஃபாலி வெர்மா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்