Viral Photo: ‛அடச்சே... என்ன இப்படி விளையாடுற...’ தன் ஆட்டத்தை தானே பார்த்து நொந்து கொண்ட கோலி!
இந்திய கேப்டன் விராட் கோலி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் மொத்தமாக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 652 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான நேற்று இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்பு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு சுருண்டது.மூன்றாவது நாள் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது.
அதனை அடுத்து நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் ஷர்துல் தாகூர்(10) ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் ராகுலும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு பிறகு முதல் பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் ஜென்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கேப்டன் கோலி அவுட்டான முறை சமூக வலைதளத்தில் பேசு பொருளானது.
இதற்கு முன்பு, இதே போன்ற தவறான ஷாட் விளையாடி விராட் அவுட்டானதை நினைவு கூர்ந்த நெட்டிசன்கள், கோலியை வறுத்தெடுத்தனர். கோலி அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது, மைதானத்தில் இருந்த வீடியோ ஸ்க்ரீனில் அவர் அவுட்டானது ரீப்ளே செய்யப்பட்டது. அதை பெவிலியனில் இருந்து பார்த்த விராட் கோலியின் முகம் வாடி இருந்ததை ரசிகர்கள் சுட்டிக்காட்டி பதிவிட்டு வருகின்றனர்.
Virat Kohli is not happy after watching his dismissal. pic.twitter.com/wVmJOqfF7l
— Johns. (@CricCrazyJohns) December 29, 2021
இதன்மூலம் இரண்டு ஆண்டுகள் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்காமல் நிறைவு செய்துள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் அடிக்காமல் 768 நாட்கள் விராட் கோலி இருந்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் மொத்தமாக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 652 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் இந்த காலகட்டங்களில் வெறும் 5 முறை மட்டுமே அரைசதம் கடந்துள்ளார்.
விராட் கோலியைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இதன்காரணமாக இந்திய அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 305 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. நேற்றைய நாளின் ஆட்டம் மீதம் இருந்த நிலையில் தென்னாப்ரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து. இறுதியாக, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருக்கிறது தென்னாப்ரிக்கா அணி. இன்று கடைசி நாள் ஆட்டம் மதியம் தொடங்க உள்ளது. தென்னாப்ரிக்கா வெற்றிப்பெற 211 ரன்கள் தேவை, இந்தியா வெற்றிப்பெற 6 விக்கெட்டுகள் தேவை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்