IND vs SA Test: தென்னாப்பிரிக்க மண்... டெஸ்ட் தொடரில் ’ ’The GOAT ஹிட் மேன்’ ரோகித் சர்மா செய்த வரலாற்று சாதனை!
தென்னாப்பிரிகாவில் டெஸ்ட் தொடரை சமன் செய்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற சாதனையும் படைத்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ஹிட்மேன் ரோகித் சர்மா.
தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி:
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.
ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமன் செய்து வரலாறு படைத்திருக்கிறது.
அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கியது. இதில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 408 ரன்களை குவித்தது. அதன்படி, அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் 287 பந்துகள் களத்தில் நின்று 185 ரன்களை குவித்தார். அதன்படி, 108. 4 ஓவர்கள் களத்தில் நின்ற தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்களை எடுத்து இந்திய அணியை மிரட்டியது.
அதனைத்தொடர்ந்து, முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. அதன்படி, இரண்டாவது இன்னிங்ஸில் 34.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், தென்னாப்பிரிக்க அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தொடரை சமன் செய்த இந்திய அணி:
இந்நிலையில், நேற்று (ஜனவரி 3) ஆம் தேதி கேப்டவுனில் இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் தொடங்கியது. இதில், தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி வெறும் 55 ரன்களில் சுருட்டியது. முன்னதாக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இச்சூழலில், களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஐடன் மார்க்ரம் 103 பந்துகள் களத்தில் நின்று 106 ரன்கள் எடுத்தார்.
ரோகித் சர்மாவின் சாதனை:
இதனைதொடர்ந்து, 79 ரன்கள் என்ற டார்க்கெட்டுடன் களம் இறங்கியது இந்திய அணி. அந்த வகையில் இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இச்சூழலில், தான் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
அதேபோல், மற்றொருமொரு சாதனையாக தென்னாப்பிரிகாவில் டெஸ்ட் தொடரை சமன் செய்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற சாதனையும் படைத்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ஹிட்மேன் ரோகித் சர்மா. முன்னதாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை டிரா செய்த இந்திய கேப்டனாக தோனி மட்டுமே இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க: Markram Century: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்... மளமளவென சதம் அடித்த ஐடன் மார்க்ரம்!
மேலும் படிக்க: IND vs SA 2nd Test: பழிக்குப் பழி! புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!