IND vs SA 2nd Test: 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன தென்னாப்பிரிக்கா; சிராஜ் 6 விக்கெட்டுகள் அள்ளி அட்டகாசம்
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அதாவது ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி கடந்த போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததால், பதிலடி கொடுக்கவேண்டும் என மிகவும் ஆக்ரோசமான விளையாட்டினை வெளிப்படுத்தினர்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாத தென்னாப்பிரிக்கா அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் டாப் ஆர்டர் தொடங்கி மிடில ஆர்டர் வரை என மொத்தம் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
சிராஜ் மட்டும் இல்லாமல், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸின் முதல் ஷெஷனில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் கெய்ல் வெர்ரைன் 15 ரன்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் பெடிங்கம் 12 ரன்களும் சேர்த்தார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மொத்தம் 4 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 23.2 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் 5 எக்ஸ்ட்ராஸ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தரப்பில் எக்ஸ்ட்ராஸ் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்கா அணி 50 ரன்களிலேயே சுருண்டு இருக்கும். மேலும் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் களமிறங்கிய வீரர்களில் இருவரும் மட்டுமே இரட்டை இலக்கை ரன்களை எட்டினர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மார்கோ யான்சென் மட்டும் டக் அவுட் ஆனார். களத்தில் இருந்த எங்கிடி பந்து எதையும் எதிர் கொள்ளாமலும் ரன் கணக்கை துவங்காமலும் இருந்தார்.
முகமது சிராஜ் கைப்பற்றிய விக்கெட்டுகள்:
தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான ஐடன் மார்க்ராம் மற்றும் அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் இருவரையும் வெளியேற்றினார். இதில் மார்க்ரம் 2 ரன்களும் எல்கர் 4 ரன்களும் சேர்த்திருந்தனர். பின்னர் வந்த டோனி டி ஜோர்ஜி 17 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது சிராஜ் வீசிய பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற டேவிட் பெடிங்காம் இந்த ஆட்டத்தில் நிதனமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், முகமது சிராஜ் வீசிய பந்து ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இவர் 12 ரன்கள் சேர்த்திருந்தார். அதேபோல், மார்கோ ஜான்சன் ரன் ஏதும் இன்றி முகமது சிராஜின் வேகத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்தார்.
சற்று நிதானமாக ஆடிய கெய்ல் வெர்ரைன் 15 ரன்களில் சிராஜ் வீசிய பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டானார். முதல் இன்னிங்ஸின் முதல் ஷெஷனில் முகமது சிராஜ் 9 ஓவர்கள் வீசி 3 மெய்டன் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.