IND vs SA: 150 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல்முறை.. ஒரே போட்டியில் குவிந்த சாதனையும், சோதனையும்..!
கேப்டவுனில் நேற்று நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்டின் முதல் நாளில் 23 பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்தனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரின் கடைசி போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கேப்டவுன் டெஸ்டின் முதல் நாளில் ஒரு விசித்திரமான, மோசமான சாதனை ஒன்றை இந்திய அணி படைத்தது.
அப்படி என்ன மோசமான சாதனை..?
இந்திய அணியின் கடைசி 6 பேட்ஸ்மேன்களால் 1 ரன் கூட எடுக்க முடியவில்லை. அனைவரும் ரன் எதுவும் எடுக்கமுடியாமல் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, கிட்டத்தட்ட 150 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 6 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 1 ரன் கூட சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்மூலம், இந்த போட்டியில் ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்தது.
டெஸ்ட் வரலாற்றில் இதற்கு முன் இப்படி நடந்திருக்கிறதா?
சுமார் 58 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வந்தது. இந்த டெஸ்டில் ஒருமுறை நியூசிலாந்தின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 58 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு 59 ரன்களுக்குள் அடுத்தடுத்து 9 வது விக்கெட் வரை பேட்ஸ்மேன்கள் பெவிலியன் சென்றனர். இதன் மூலம், இந்த போட்டியில் விளையாடிய 6 பேட்ஸ்மேன்களால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதேசமயம் கடந்த 2012ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் 1 ரன் கூட எடுக்க முடியவில்லை. நியூசிலாந்தின் ஸ்கோர் 2 விக்கெட்டுக்கு 133 ரன்கள், ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்து 5 விக்கெட்களை இழந்து 133 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை விட்டுகொடுத்தது நியூசிலாந்து அணி.
121 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்:
கேப்டவுனில் நேற்று நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்டின் முதல் நாளில் 23 பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்தனர். இதற்குமுன்பு, இதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதில், டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக விக்கெட்டுகள் விழுந்த சாதனை சுமார் 121 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிகபட்சமாக 27 பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். இந்த டெஸ்ட் 1902ல் இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. அதேபோல், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்டின் முதல் நாளான நேற்று 23 வீரர்கள் ஆட்டமிழந்தனர். கிட்டத்தட்ட 150 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது முறையாக நடந்துள்ளது.
முதல் நாள் எப்படி அமைந்தது..?
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் 36 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 55 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பதிலுக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 153 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்கா சார்பில் ககிசோ ரபாடா, நந்த்ரே பெர்கர், லுங்கி என்கிடி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். அதே நேரத்தில், இந்திய தரப்பில் முகமது சிராஜ் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.