Ind vs SA, 1st Test Match Highlights: செஞ்சுரியன் மைதானத்தில் வென்ற முதல் ஆசிய அணி- சாதனை படைத்த விராட் படை !
IND vs SA, 1st Test, SuperSport Park Cricket Stadium: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 327 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்பு இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 305 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 94 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. இதைத் தொடர்ந்து ஐந்தாவது நாளான இன்று முதலில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எல்கர் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தென்னாப்பிரிக்க அணியின் வீரர்களில் பவுமா மட்டும் ஒரளவு தாக்குப்பிடித்து ஆடினார். மற்ற வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்து வந்தனர்.
#TeamIndia WIN at Centurion 👏👏🇮🇳#SAvIND pic.twitter.com/35KCyFM4za
— BCCI (@BCCI) December 30, 2021
டிகாக் 21 ரன்களுக்கு சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து முல்டர் 1 ரன்னிலும், ஜென்சன் 13 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். கடைசியாக ரபாடா மற்றும் நிகிடி ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்தியா சார்பில் வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். சிராஜ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த போட்டி வரும் ஜனவரி 3ஆம் தேதி ஜோகனிஸ்பேர்கில் தொடங்குகிறது.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு ஜோகனிஸ்பேர்கில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் தற்போது 2021-22 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீண்டும் செஞ்சுரியன் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக ரத்தானது. அப்படி இருக்கும் போது வெறும் 4 நாட்களில் இந்திய அணி டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‛அந்த பையனா நீ... 2018 ல் போட்டோ எடுத்து, 2021ல் என் விக்கெட்டையே எடுத்துட்ட’ அசந்து போன கோலி!