IND vs SA: சாய் சுதர்ஷன் அறிமுகமா? மழையால் பிரச்சனையா? இந்தியா - தென்., இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று!
டி20 தொடரைப் போலவே, ஒருநாள் தொடரிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இந்திய அணி வலம் வரலாம்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக உள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி 1-1 என சமன் செய்தது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும் நிலையில், இறுதியாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் விளையாடவுள்ளது.
சாய் சுதர்சன், ரிங்கு சிங் அறிமுகமா..?
டி20 தொடரைப் போலவே, ஒருநாள் தொடரிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இந்திய அணி வலம் வரலாம். தமிழக வீரர் சாய் சுதர்ஷன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகலாம். அதே சமயம், சஞ்சு சாம்சன் விளையாடும் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், இந்திய அணியில் ரஜத் படிதார், திலக் வர்மா, முகேஷ் குமார் என பல இளம் வீரர்கள் இடம் கிடைக்குமா என்பதையும் பார்க்கலாம்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் அவரால் விளையாட முடியாது. அவரைத் தவிர, தீபக் சாஹரும் குடும்ப மருத்துவ அவசரநிலை காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். மேலும் கே.எல்.ராகுல், அக்சர் படேல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால் யார் யார் அணியில் இடம் பிடிப்பார்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
பந்துவீச்சு எப்படி..?
மூத்த லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலுக்கு முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் பதினொன்றில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம்.கடந்த டி20யில் குல்தீப் தனது மாயாஜால சுழலினால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை தண்ணீர் குடிக்க வைத்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குல்தீப் விளையாடுவது உறுதியான நிலையில், இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேல் களமிறங்குவார். வேகப்பந்து வீச்சாளர்களான முகேஷ் குமார், அவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் விளையாடுவது உறுதி.
இன்று மழைக்கு வாய்ப்பா..?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் மழையால் எந்தவித தடையும் இருக்காது. இப்போட்டியில் மழை பெய்ய 2 முதல் 5 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. மழை பெய்தாலும் சில நிமிடங்களே இருக்கும் என்றும் மீதமுள்ள நேரம் முழுவதும் வானம் தெளிவாக இருக்கும். போட்டியின் போது அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரியாக இருக்கும்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்ஷன், திலக் வர்மா/ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங் / சஞ்சு சாம்சன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங்.
தென்னாப்பிரிக்கா அணி:
ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஜார்ஜி, ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, நந்த்ரே பெர்கர், லிசாட் வில்லியம்ஸ்.