(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs PAK: கோலி டாப்.. ரோகித் ப்ளாப்..! பாகிஸ்தானுடன் மோதும் கொழும்பு மைதானத்தில் இருவரும்.. இதுவரை..
சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளில் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் தொடரை விட்டு வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
விராட்கோலி:
சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வரும் 10-ந் தேதி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் ஆட உள்ளன. ஏற்கனவே நடந்த லீக் போட்டிக்கு மழையால் முடிவு கிடைக்காத நிலையில், சூப்பர் 4 சுற்றில் மீண்டும் மோதுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
போட்டி நடைபெறும் பிரேமதாசா மைதானம் இந்திய நட்சத்திர வீரர் விராட்கோலிக்கு மிகவும் ராசியான மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் அவர் கடைசியாக 2017ம் ஆண்டு ஆடியுள்ளார். இந்த மைதானத்தில் அவர் கடைசியாக ஆடிய மூன்று போட்டியிலும் சதம் விளாசியுள்ளார். அந்த மூன்று சதங்களும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வந்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டி நடைபெறும் கொழும்பு மைதானத்தில் விராட் கோலி இதுவரை 8 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 3 சதங்கள் உள்பட 519 ரன்களை எடுத்துள்ளார். கடைசியாக ஆடிய 3 போட்டிகளில் 110 ரன்கள் நாட் அவுட், 131, 128 நாட் அவுட் என்று விளாசியுள்ளார். உலகின் பல்வேறு மைதானங்களிலும் கோலோச்சியுள்ள விராட் கோலி கொழும்பு மைதானத்திலும் அசத்தலாக ஆடியிருப்பது அவருக்கு உத்வேகத்தை அளிக்கும்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் கோலி வெறும் 4 ரன்களுக்கு நடையை கட்டியது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஷாகின் அப்ரீடி பந்துவீச்சுக்கு ரோகித்சர்மா, விராட் கோலி தடுமாறமால் தங்களது வழக்கமான பேட்டிங்கை ஆடினால் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தலான ஸ்கோரை இந்தியா குவிக்கும்.
இந்திய கேப்டன் ரோகித்சர்மா கொழும்பு மைதானத்தில் ஆடிய புள்ளிவிவரங்கள் திருப்திரகமாக இல்லை. அவர் இதுவரை 9 போட்டிகள் அங்கு ஆடியிருந்தாலும் அவர் 196 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 24.50 ஆகும். பாகிஸ்தான் பவுலிங்கிற்கு எதிராக அவர் தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில் சூப்பர் 4 போட்டியில் கட்டாயம் நன்றாக ஆட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
புள்ளி விவரங்கள் விராட்கோலிக்கு சாதகமாக இருந்தாலும் ஷாகின், நசீம்ஷா, ஹாரிஸ் ஆகியோரது வேகத்தை சமாளிக்க வேண்டியதே அவருக்கு உள்ள மிகப்பெரிய சவால் ஆகும். ரோகித்சர்மா களத்தில் நீண்ட நேரம் நின்றுவிட்டால் நிச்சயம் இந்திய அணி ரன் குவிப்பில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: Ronaldo Ballon d'or: பாலன் டி ஆர் விருது பரிந்துரை பட்டியலில் இல்லாத ரொனால்டோ பெயர்..! 20 ஆண்டுகளில் முதன்முறை: காரணம் என்ன?
மேலும் படிக்க: ISL 2023-24 Schedule:செப்டம்பர் 21-ந் தேதி தொடங்குகிறது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா.. ரசிகர்களே இதோ அட்டவணை..!