Shoaib Malik on Virat Kohli : "விராட்கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்" - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அறிவுரை..!
விராட்கோலியிடம் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் அறிவுரை கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரில் இந்தியா பாகிஸ்தானுடனான வெற்றியுடன் இந்த தொடரை அற்புதமாக தொடங்கியுள்ளது. மெல்போர்ன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் விராட்கோலியின் அபார பேட்டிங்கால் இந்திய அணி திரில் வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் 82 ரன்கள் விளாசிய விராட்கோலி தான் எப்போதும் கிங் என்று நிரூபித்தார். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, “ விராட்கோலியின் சிக்ஸர்களை பாருங்கள். அவர் ஒரு பவர் ஹிட்டர் போல கடைசியில் பந்துகளை தாக்கினார். அவர் ஒரு பவர் ஹிட்டர் இல்லை என்றாலும், அவரிடம் பந்துகள் எவ்வளவு மீதம் இருக்கிறது, பந்துவீச்சாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் மற்றும் மைதானத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் சிந்தனை இருந்தது. அவரிடம் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் பாடம் கற்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்ற சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல், ரோகித்சர்மா இருவரும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை ஏற்படுத்தினர்.
அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவும் 15 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது சேர்ந்த விராட்கோலி – ஹர்திக் பாண்ட்யா ஜோடி மிகவும் பொறுப்புடன் ஆடியது. ஹர்திக் பாண்ட்யா நிதானமாக ஆடியபோது, விராட்கோலி 19வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களையும், கடைசி ஓவரில் 1 சிக்ஸரையும் விளாசி ஆட்டத்தை இந்தியாவின் வசம் கொண்டு வந்தார். கடைசி பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுத்ததால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விராட்கோலி இந்த போட்டியில் 53 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 82 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடுமையான விமர்சனங்களை ஓராண்டாக எதிர்கொண்டு வந்த விராட்கோலி, ஒரு மாத இடைவேளைக்கு பிறகு அணிக்கு திரும்பியது முதல் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் படிக்க : T20 WC 2022 NZvsAFG : வெற்றியை தொடருமா நியூசிலாந்து..? அசத்தல் ஆட்டத்தை காட்டுமா ஆப்கானிஸ்தான்..?
மேலும் படிக்க : Fastest 50 T20 WC: குறைந்த பந்துகளில் அரைசதம்..! ஆஸ்திரேலியாவின் ஸ்டோய்னிஸ் புதிய சாதனை...!