Fastest 50 T20 WC: குறைந்த பந்துகளில் அரைசதம்..! ஆஸ்திரேலியாவின் ஸ்டோய்னிஸ் புதிய சாதனை...!
ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தற்போது டி20 உலககோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், நேற்று கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை எதிர்கொண்டது.
இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் 11 ரன்களிலும், மிட்செஷ் மார்ஷ் 17 ரன்களிலும், மேக்ஸ்வெல் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
Only Yuvraj Singh has made a #T20WorldCup fifty in fewer balls than Marcus Stoinis 💥#AUSvSL #T20WorldCup pic.twitter.com/xJaKA98flU
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 25, 2022
கேப்டன் ஆரோன் பிஞ்சும் நிதானமாகவே ஆட, ஆஸ்திரேலிய 12.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களை எடுத்திருந்தது. அப்போது 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டோய்னிஸ் ஆட்டத்தை அடுத்த 4 ஓவர்களில் முடித்து வைத்தார். அவர் 18 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 59 ரன்கள் விளாசி 16.3 ஓவர்களிலே ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார்.
மார்கஸ் ஸ்டோய்னிஸ் நேற்று தன்னுடைய அதிரடியான அரைசதம் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, உலககோப்பை டி20 தொடரில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தார். ஸ்டோய்னிஸ் நேற்றைய போட்டியில் 17 பந்துகளிலே அரைசதம் விளாசி அசத்தினார். இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவின் யுவராஜ்சிங் 12 பந்துகளில் அரைசதம் விளாசியவர் என்ற பெருமையுடன் முதல் உலககோப்பை தொடங்கி தற்போது வரை கம்பீரமாக முதலிடத்தில் உள்ளார்.
Marcus Stoinis with a historic knock in Perth 🙌
— ICC (@ICC) October 25, 2022
📺 Highlights: https://t.co/F7ixKI8ZxM#T20WorldCup pic.twitter.com/tSroEXIzzL
இரண்டாவது இடத்தில் மார்கஸ் ஸ்டோய்னிசுடன், நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் மைபர்க் 17 பந்துகளிலும், மேக்ஸ்வெல் 18 பந்துகளிலும், சோயிப் மாலிக் 18 பந்துகளிலும், கே.எல்.ராகுல் 18 பந்துகளிலும் அரைசதம் விளாசி அசத்தியுள்ளனர். மேலும், டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர் என்ற புதிய சாதனையை ஸ்டோய்னிஸ் படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை டேவிட் வார்னர் தன்வசம் வைத்திருந்தார். அவர் 18 பந்துகளில் அரைசதம் விளாசியிருந்தார். மேக்ஸ்வெல் இரு முறை 18 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார். கிரீன் 19 பந்துகளிலும், மேக்ஸ்வெல் 19 பந்துகளிலும் ஒரு முறை அரைசதம் விளாசியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின அசத்தல் ஆல் ரவுண்டராக வலம் வரும் ஸ்டோய்னிஸ் இதுவரை 59 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 499 ரன்களை விளாசியுள்ளார். மேலும், சிறந்த வேகப்பந்துவீச்சாளரான ஸ்டோய்னிஸ் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.