IND vs NZ: 31 ரன்களுக்குள் பறிபோன 4 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியாவை காப்பாற்றுவது யார்?
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் தொடங்கவே இல்லாத நிலையில், இரண்டாவது நாளான இன்று டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.
கோலி டக் அவுட்:
மழை பெய்துள்ள சூழலில், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆட்டத்தை தொடங்கினர். நிதானமாகவே இருவரும் ஆட்டத்தை தொடங்கினர்.
ரோகித் சர்மா பந்தை விளாச முற்பட்டபோது டிம் சவுதி பந்தில் போல்டானார். அவர் 16 பந்துகளில் 2 ரன்களுடன் போல்டாகி வெளியேறினார். 9 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணிக்காக விராட் கோலி களமிறங்கினார். அவர் ரன் எடுப்பதற்கு முன்பே வில்லியம் ஓரோர்க் பந்தில் அடித்த பந்தை கிளென் பிலிப்ஸ் பாய்ந்து அபாரமாக கேட்ச் பிடித்தார். இதனால், விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறினார்.
10 ரன்களுக்குள் 3 விக்கெட்:
இந்த போட்டி மூலம் மீண்டும் டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான் களமிறங்கினார். களமிறங்கிய உடனே அடித்து ஆட சர்பராஸ் கான் முயற்சித்தார். பவுண்டரிக்கு அவர் விளாசிய பந்தை கான்வே அபாரமாக பாய்ந்து ஒற்றைக் கையால் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்திய அணி 10 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து, தற்போது இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் – ரிஷப்பண்ட் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றனர். நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சவுதி, ஹென்றி, ஓரோர்க் மூன்று பேரும் வேகத்தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களது பந்துவீச்சை இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் – ரிஷப்பண்ட் இருவரும் எதிர்கொண்டு ஆடினர். நீண்ட நேரம் பொறுமையுடன் ஆடிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் 63 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இருவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர். குறிப்பாக, விராட் கோலி டக் அவுட்டாகியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. வங்கதேச தொடரிலும் இருவரும் பெரியளவில் சோபிக்காத நிலையில், இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் ஒற்றை இலக்கத்தில் ஆடியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய அணி தற்போது 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
இந்திய அணியில் இன்று ஆகாஷ் தீப், சுப்மன்கில், அக்ஷர் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சர்பராஸ்கான், சிராஜ், குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.