IND vs ENG: என்னய்யா கிண்டல் பண்றீங்க? சதத்தால் சம்பவம் செய்த சுப்மன்கில் - இனி அட்டகாசம்தான்
இந்திய அணியின் கேப்டன் சுப்மன்கில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது கேப்டன்சியில் ஆடிய முதல் போட்டியிலே சதம் விளாசி விமர்சனங்களுக்கு பதிலடி தந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. அனுபவமில்லாத இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுருண்டுவிடும் என்று பலரும் கணித்த நிலையில், அந்த கணிப்பிற்கு இந்திய அணி தனது பேட்டால் பதிலடி தந்துள்ளது.
சுப்மன்கில் மீது குவிந்த விமர்சனங்கள்:
குறிப்பாக, ஐபிஎல் தொடர் நடந்தபோது டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்ட சுப்மன்கில் மீது பலரும் விமர்சித்தனர். அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்காததும், பும்ராவிற்கு பதில் சுப்மன்கில்லிற்கு கேப்டன்சியை வழங்கியதும் என சுப்மன்கில் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்தது.
கே.எல்.ராகுல், பும்ரா, ஜடேஜா, ரிஷப்பண்ட், சிராஜ் தவிர மற்ற அனைவரும் குறைந்த வீரர்களாக இருந்ததால் இந்த அணியை சுப்மன்கில் எப்படி வழிநடத்தப்போகிறார்? என்ற கேள்வி பிரதானமாக இருந்தது. ஆனால், ஹெடிங்லேவில் டாஸ் தோற்ற பிறகு பேட்டிங்கில் என்ன செய்யப்போகிறது இந்தியா? என்று கேள்விகள் எழுந்த நிலையில் ஜெய்ஸ்வால் - ராகுல் ஜோடி அபாரமாக ஆடியது.
சதத்தால் பதிலடி தந்த சுப்மன்:
சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றம் தந்தாலும், கேப்டன் சுப்மன்கில் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ஆடிய இன்னிங்ஸ் அதி அற்புதமாக இருந்தது. கேப்டன்சி என்ற அழுத்தம் துளியளவும் பேட்டிங்கில் இல்லாத அளவிற்கு சுப்மன்கில் பேட்டிங் இருந்தது. கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன் கார்ஸ், ஜோஷ் டங், பென் ஸ்டோக்ஸ், பஷீர் ஆகியோர் பந்துவீசியும் சுப்மன்கில்லை அவுட்டாக்கவே இயலவில்லை.
அவர் பவுண்டரிகளாக விளாசியும், ஓரிரு ரன்களாக எடுத்தும் ஒருநாள் போட்டி போல ஆடினார். இதனால், இந்திய அணியின் ரன்வேகம் நேற்றே 300 ரன்களை கடந்தது. ஜெய்ஸ்வால் சதம் விளாசி அவுட்டான பிறகு அடுத்து வந்த ரிஷப்பண்டும் அபாரமாக ஆடினார். ரிஷப்பண்ட்டை மறுமுனையில் வைத்துக்கொண்டு அபாரமாக ஆடிய கேப்டன் சுப்மன்கில் சதம் விளாசி அசத்தினார்.
கேப்டனாக முதல் போட்டியிலே சதம்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 5வது சதம் இதுவாகும். கேப்டனாக களமிறங்கி தான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலே அதுவும் கேப்டனாக முதல் இன்னிங்சிலே வெளிநாட்டு மண்ணில் சதம் விளாசிய பெருமையையும் சுப்மன்கில் பெற்றார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 175 பந்துகளில் 16 பவுண்டரி 1 சிக்ஸருடன் 127 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். அவருடன் ரிஷப்பண்ட் 65 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்திய அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட சுப்மன்கில் தற்போது தனது அபார சதத்தால் இந்திய அணியின் அடுத்த தலைமுறைக்கு கேப்டன் என்பதற்கு அஸ்திவாரத்தை வலுவாக இட்டுள்ளார். தொடர்ந்து இந்திய அணி சிறப்பாக ஆடி இந்த தொடரில் ஆதிக்கத்தை செலுத்தினால் சுப்மன்கில் கேப்டன்சி மீது இருந்த சந்தேகமும், விமர்சனங்களும் அடியோடு விட்டு விலகும்.
இந்திய அணிக்கு டெஸ்ட் கேப்டனாக அறிமுகமான போட்டியிலே விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்கார், விராட் கோலிக்கு அடுத்தபடியாக சுப்மன்கில் சதம் விளாசி அசத்தினார்.




















