IND vs BAN, 1st Test: வங்கதேசத்தை சுருட்டிய இந்திய அணி..188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. சட்டோகிராமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
2வது இன்னிங்சில் 513 ரன்கள் இந்திய அணி இலக்கு வைத்திருந்தது. ஆனால் வங்க தேச அணி 324 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சாகிர் ஹசன் 100 ரன்களும் ஷகிப் 84 ரன்களும் ஷாண்டோ 67 ரன்களும் அடித்தனர்.
இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்ட நேர முடிவில், வங்க தேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்து இருந்தது. அதையடுத்து, இன்று கடைசி மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் மெஹிதி ஹாசன் 13 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய ஷகிப் அல் - ஹசன் 84 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக, 324 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, அக்சர் படேல் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.