Shardul Thakur Record: பிராட்மேன், பார்டர் சாதனையை சமன் செய்த "லார்ட்' ஷர்துல் தாக்கூர்..! அப்படி என்ன சாதனை..?
உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடித்தது ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான்களின் சாதனையை சமன் செய்துள்ளது.
ஐசிசி தரப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.
பிராட்மேன், ஆலன் பார்டர் சாதனை சமன்:
லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணி சார்பில் ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் அரைசதம் விளாசி இருந்தனர். ரஹானே இதன் மூலம் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த 13வது இந்திய வீரரானார். அதேபோல் ஷர்துல் தாக்கூர் தான் அடித்த அரைசதம் மூலம் பேட்டிங் ஜாம்பவன்களான டான் பிராட்மேன் மற்றும் ஆலன் பார்டரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மிரட்டும் ஷர்துல் தாக்கூர்:
அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே பேட்டிங்கில் கவனம் செலுத்தி வரும் இந்திய பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்கூர். இந்த போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம், லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவரில்லாமல், வெளிநாட்டு வீரர்களில் ஓவலில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் விளாசியவர் என்ற பெருமையை டான் பிராட்மேன் மற்றும் ஆலன் பார்டருடன் பகிர்ந்து கொள்கிறார்.
இவர் கடந்த 2021ஆம் ஆண்டு 57 ரன்களும், அதே ஆண்டு மற்றொரு போட்டியில் 60 ரன்களும் சேர்த்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் அரைசதம் விளாசியுள்ளார். ஓவல் மைதானத்தில் தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் விளாசிய முதல் இந்திய வீரர் இவர் தான்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:
இந்த போட்டியில் இவர் 101 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்கள் சேர்த்தார். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023இல் இந்தியா சார்பில் அரைசதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் இவர் தான். மூன்றாவது நாள் ஆட்டத்தில் பரத் தனது விக்கெட்டை 5 ரன்னில் இழக்க, அதன் பின்னர் வந்த ஷர்துல் தாக்கூர் சிறப்பாக ஆடினார். இவர்களது கூட்டணியில் இந்திய அணி சிறப்பாக மெல்ல மெல்ல மீண்டு வந்தது. போட்டியின் 60வது ஓவரில் ஷர்துல் தாக்கூரை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் என ஆஸ்திரேலிய அணி கொண்டாட்டத்தில் இருந்தது. ஆனால் ரிவ்யூவில் அவர் இந்த பந்தும் நோபாலாக வீசியது கண்டறியப்பட்டது. அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் சேர்த்திருந்தது. ஷர்துல் தக்கூர் 36 ரன்னில் இருந்தார். இவர் பிராட்மேன் மற்றும் ஆலன் பார்டரின் சாதனையை சமன் செய்ததை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.