Gambhir: ரோகித், கோலிக்கு எதிராக சதி செய்கிறாரா கம்பீர்? விட்டு விளாசும் ரசிகர்கள்!
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டுவதற்கான வேலையை கவுதம் கம்பீர் செய்வதாக கூறி ரசிகர்கள் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவரின் கிரிக்கெட் சகாப்தமும் முடிவுக்கு வரும் சூழலில் உள்ளது. டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இளைஞர்களுக்கு வழிவிடும் விதமாக டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
ரோகித் சர்மா - விராட் கோலி:
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட இருவரும் தயாராகி வந்த நிலையில் கம்பீர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று தந்ததால் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கம்பீரின் வருகைக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி தடுமாறத் தொடங்கினர்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் சொதப்பிய நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இங்கிலாந்து தொடருக்கு சுறுசுறுப்பாக தயாராகிக் கொண்டிருந்த விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பறிக்கப்பட்ட கேப்டன்சி, ஒதுக்கப்பட்ட கோலி:
இது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கோலி இங்கிலாந்து தொடருக்காக காத்திருந்த நேரத்தில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவர் மீது நிர்வாக அழுத்தம் திணிக்கப்பட்டிருப்பதாக கேள்விகளை உண்டாக்கியது. குறிப்பாக, கோலி - ரோகித்திற்கு எதிராக கம்பீர் செயல்படுவதாக கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
இந்த நிலையில், 2027ம் ஆண்டு உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு விராட் கோலி - ரோகித் சர்மா தயாராகி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், திடீரென ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சியை பிசிசிஐ பறித்துள்ளது. இளம் வீரர் சுப்மன்கில்லிடம் கேப்டன்சியை ஒப்படைத்துள்ளது.
கம்பீர், அகர்கரை விளாசும் ரசிகர்கள்:
ரோகித்தின் கேப்டன்சி பறிக்கப்பட்டதே பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ள நிலையில், ரோகித் மற்றும் விராட் கோலி இருவரும் 2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்று இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடுவதே அடுத்த திட்டம் என்று விராட் கோலி கூறியிருந்த நிலையில், அஜித் அகர்கர் இவ்வாறு கூறியது பலருக்கும் கேள்வியை உண்டாக்கியுள்ளது. இதனால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு எதிராக கவுதம் கம்பீர் - அஜித் அகர்கர் இருவரும் சதி செய்கின்றனரா? என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் பலரும் எழுப்பி வருகின்றனர். மேலும், கம்பீரையும், அகர்கரையும் சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர்.
தான் நினைத்ததை எல்லாம் செய்ய வேண்டும், தான் நினைப்பதுதான் களத்தில் நடக்க வேண்டும் என்று கம்பீர் கருதுவதால்தான் விராட் கோலி - ரோகித் சர்மாவை அவர் ஓரங்கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



















