IND vs AUS: அப்பாடா.. 14 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அரைசதம் விளாசிய கோலி..! கொண்டாடும் ரசிகர்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சுப்மன்கில் சதம், விராட்கோலி அரைசதம் காரணமாக இந்திய அணி 289 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட்கோலி. முன்னாள் கேப்டனான விராட்கோலி இந்திய அணிக்கு மூன்று வடிவ போட்டிகளிலுமே மிகப்பெரிய பலம் ஆவார். இரண்டரை ஆண்டுகளாக ரன் குவிக்க முடியாமல் திணறி வந்த விராட்கோலி, கடந்தாண்டு நடந்த ஆசிய கோப்பைக்கு பிறகு தனது கம்பேக்கை அளித்தார்.
விராட்கோலி அரைசதம்:
டி20யில் சதம், வங்காளதேசம், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சதம் என்று விராட்கோலி பழைய ரன்மெஷினாக கம்பேக் அளித்தார். இது இந்திய அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பழைய விராட்கோலியாக கம்பேக் தந்த விராட்டிற்கு, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ரன் குவிப்பது சிரமமான ஒன்றாகவே இருந்து வந்தது. தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் டிராபியில் டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்து தனது சத தாகத்தை தீர்ப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில், மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஏமாற்றத்தை மட்டுமே தந்தார்.
14 இன்னிங்ஸ்கள் காத்திருப்பு:
இந்த நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இன்று இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான கட்டத்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் விராட்கோலி. விராட்கோலி சுமார் 14 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அடிக்கும் அரைசதம் இதுவாகும். அதாவது, 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு விராட்கோலி டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ள அரைதசம் இதுவாகும்.
புஜாரா ஆட்டமிழந்த பிறகு சுப்மன்கில்லுடன் அருமையாக கூட்டணி அமைத்தது மட்டுமின்றி, ஜடேஜாவுடனும் இணைந்து விராட்கோலி அசத்தியுள்ளார். போட்டியின் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை எடுத்துள்ளது. விராட்கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். விராட்கோலியின் இந்த அரைசதம் நாளை சதமாக மாறுமா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். ரசிகர்களின் எதிர்பாரப்பை விராட்கோலி நாளை பூர்த்தி செய்வாரா? என்பது நாளை காலை தெரிந்துவிடும்.
சதமாக மாறுமா?
விராட்கோலி கடந்த 14 இன்னிங்ஸ்களில் 45, 23,13, 11, 20, 1, 19, 24, 1, 12, 44, 20, 22, 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதில் ஒரு இன்னிங்சில் மட்டும்தான் ஆட்டமிழக்கவில்லை. இந்த நிலையில், அகமதாபாத் டெஸ்ட் போட்டி மூலம் அரைசதம் அடித்து தன்னுடைய ரசிகர்களை விராட்கோலி மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். 2023ம் ஆண்டில் விராட்கோலி டெஸ்ட் போட்டியில் அடித்த முதல் அரைசதம் இதுவாகும். சுப்மன்கில், விராட்கோலி ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை எடுத்துள்ளது.
விராட்கோலி கடைசியாக டெஸ்ட் போட்டியில் 2019ம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார். அதன்பின்பு அவர் டெஸ்ட் போட்டியில் சதமடிக்கவில்லை. இந்த போட்டியில் சதமடித்து ரசிகர்களின் ஏக்கத்தை தீர்ப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 34 வயதான விராட்கோலி இதுவரை 108 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 27 சதங்கள், 7 இரட்டை சதங்கள், 29 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 288 ரன்கள் எடுத்துள்ளார். இதுதவிர, 271 ஒருநாள் போட்டிகளில் 46 சதங்கள், 64 அரைசதங்களுடன் விராட்கோலி 12 ஆயிரத்து 809 ரன்களையும் எடுத்துள்ளார். 115 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் உள்பட 37 அரைசதங்களையும் விளாசியுள்ளார்.
மேலும் படிக்க: "எனக்கும் பலமுறை நடந்திருக்கு…" பாலியல் துன்புறுத்தலை வெளிப்படுத்திய மற்றொரு கிராண்ட்மாஸ்டர்!
மேலும் படிக்க: டி20 வரலாற்றில் இப்படி ஒரு ரன் சேஸா..? கிளாடியேட்டர்ஸ் சாதனையை 48 மணி நேரத்தில் உடைத்த சுல்தான்ஸ்!