IND vs AUS 1st T20: இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்.. காயம் காரணமாக விலகிய பும்ரா
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலியில் இன்று நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இன்று நடைபெறும் முதல் டி20 போட்டியில் யார் விளையாடுவார்கள் என்ற ஆர்வம் எழுந்தது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. காயத்தில் இருந்த மீண்டு வந்த ஹர்சல் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறவில்லை. மற்றொரு தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை.
Here's #TeamIndia's Playing XI for the T20I series opener 🔽
— BCCI (@BCCI) September 20, 2022
Follow the match 👉 https://t.co/ZYG17eC71l #INDvAUS pic.twitter.com/VUaQFzVUDf
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணியில் டிம் டேவிட் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் மிட்சல் மார்ஷ் இல்லாததால் ஸ்டீவ் ஸ்மித் 3வது இடத்தில் களமிறங்க உள்ளார்.
இந்தியா vs ஆஸ்திரேலியா இதுவரை:
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் தற்போது வரை 22 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இந்திய அணி 13 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய மண்ணில் தற்போது வரை நடைபெற்றுள்ள 7 டி20 போட்டிகளில் இந்திய அணி 3லும், ஆஸ்திரேலிய அணி 4லும் வெற்றி பெற்றுள்ளன.
முதல் டி20 போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் செய்தியாளர்களை சந்திதார். அப்போது, “தொடக்க ஆட்டக்காரராக நான் ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். குறிப்பாக என்னுடைய ஸ்டிரைக் ரேட் தொடர்பாக நான் கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு பேட்ஸ்மேன் எப்போதும் ஒரே ஸ்டிரைக் ரேட் வைத்து ஆடியதில்லை.
எனினும் அதில் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து அனைவரும் விளையாடி வருகிறோம். மேலும் எங்களுடைய அணியில் அனைவரும் தவறு செய்து கற்று கொள்ளும் சூழல் உள்ளது. இதனால் இவர்கள் அவர்களுடைய தவறுகளில் இருந்து எளிதாக கற்றுக் கொண்டு வருகின்றனர். உலகக் கோப்பை தொடருக்கு தற்போது நாங்கள் 80-85 சதவிகிதம் தயாராக உள்ளோம். இன்னும் ஒரு சில இடங்களில் நாங்கள் முன்னேற வேண்டும். ஒரு பெரிய தொடரை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் இவை அனைத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் என்பதை போட்டியின் ஆடுகளம், எதிரணியின் பலம் மற்றும் சூழல் ஆகியவற்றை பொறுத்தே முடிவு செய்ய முடியும். இது மிகவும் கடினமான முடிவாக தான் இருக்கும். ஏனென்றால் இருவரும் அணியின் சிறந்த வீரர்கள். இவர்களில் யாரை தேர்வு செய்வது என்பது போட்டியின் போது எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.