IND vs AUS 1st T20 Highlights: மேத்யூ வேட், க்ரீன் அதிரடி... 208 ரன்களை சேஸ் செய்து அசத்திய ஆஸி.. அணி
IND vs AUS, 1st T20, Mohali Cricket Stadium: இந்திய அணிக்க்கு எதிரான முதல் டி20 போட்டியை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா அரைசதத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் 209 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் சிக்சர் அடித்து தொடங்கினார். அதன்பின்னர் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபிஞ்சு 22 ரன்களில் அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்து கேம்ரூன் க்ரீன் அசத்தலாக விளையாட தொடங்கினார். இருவரும் மாறி மாறி பவுண்டரிகள் விளாச தொடங்கினர். சிறப்பாக விளையாடிய கேம்ரூன் க்ரீன் 30 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகளின் உதவியுடன் 61 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக 10 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து 61 ரன்கள் எடுத்திருந்த கேம்ரூன் க்ரீன் அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து மறுமுனையில் ஆடி வந்த ஸ்டீவ் ஸ்மித் 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வேல் 1 ரன்னில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். உமேஷ் யாதவ் வீசிய ஒரே ஓவரில் இந்திய அணி இரண்டு விக்கெட் எடுத்தது. இதன்விளைவாக ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின்னர் இங்லிஸ் விக்கெட்டை அக்ஷர் பட்டேல் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களில் 145 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்ததிருந்தது. அப்போது மேத்யூ வேட் மற்றும் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக பவுண்டரிகளாக மாற்றினர். குறிப்பாக மேத்யூ வேட் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார்.
கடைசி இரண்டு ஒவரில் ஆஸ்திரேலிய அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது புவனேஸ்வர் குமார் ஆட்டத்தின் 19வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் மேத்யூ வேட் 3பவுண்டரிகளை விளாசினார். இதனால் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது டிம் டேவிட் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூ வேட் 21 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் விளாசி 45* ரன்களுடன் இருந்தார். அத்துடன் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.