ICC WTC Final Venue: மீண்டும் லண்டனில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி .. எந்த மைதானம் தெரியுமா?
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் மைதானம் தொடர்பாக ஐசிசி தகவல் வெளியிட்டுள்ளது.
சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்தத் டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கும் மைதானம் தொடர்பான அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஓவல் மைதானத்தில் இதற்கு முன்பாக 2004 மற்றும் 2017ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது.
ANNOUNCEMENT 📢
— ICC (@ICC) September 21, 2022
The venues for the #WTC23 and #WTC25 finals are now confirmed!
Details 👇https://t.co/QFjUnuIw3m
இதைத் தொடர்ந்து மூன்றாவது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் 2025ஆம் ஆண்டு இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய எப்படி தகுதி பெறும்?
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிபில் இந்திய அணிக்கு இன்னும் இரண்டு டெஸ்ட் தொடர்கள் எஞ்சியுள்ளன. அவற்றில் ஒன்று பங்களாதேஷ் அணியுடனும் மற்றொன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடனும் உள்ளது. இந்திய முதலில் பங்களாதேஷ் சென்று அங்கு இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்திய அணி தற்போது வரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி மற்றும் 2 டிரா செய்துள்ளது. அத்துடன் 52.08% புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்:
அணி | டெஸ்ட் | வெற்றி | புள்ளிகள் % |
ஆஸ்திரேலியா | 10 | 6 | 70 |
தென்னாப்பிரிக்கா | 10 | 6 | 60 |
இலங்கை | 10 | 5 | 53.33 |
இந்தியா | 12 | 6 | 52.08 |
பாகிஸ்தான் | 7 | 4 | 51.85 |
தற்போதைய நிலைப்படி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் இறுதிப் போட்டியில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும். கடந்த முறை இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. ஆகவே இந்த முறை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா என்ற ஆர்வம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.