IND VS PAK: இந்தியா, பாக்., மோதும் மகளிர் உலகக் கோப்பை! சாதனையை தக்கவைக்குமா மித்தாலியின் படை !
மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
மகளிருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் சர்வதேச தரவரிசை அடிப்படையில் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி நாளை தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து உலக கோப்பை தொடரில் களமிறங்குகிறது. உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்திருந்தது.
It's time to show your support for the Indian Women's Team! Don these blues by @mpl_sport & back our women as they take on Pakistan tomorrow 🇮🇳 #INDvPAK #MPLSports #BillionCheersJersey pic.twitter.com/Jnjr7AwVlZ
— BCCI Women (@BCCIWomen) March 5, 2022
எனினும் உலகக் கோப்பை தொடருக்கான இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்தது. ஆகவே அந்த வெற்றியுடன் இந்திய அணி நாளை களமிறங்க உள்ளது. மேலும் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி இரண்டு முறை பாகிஸ்தான் அணியை சந்தித்துள்ளது. அந்த இரண்டு முறையும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. ஆகவே உலகக் கோப்பையில் இதுவரை பாகிஸ்தான் அணியிடம் தோற்கவில்லை என்ற சாதனை இந்திய அணி நாளை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அவருடன் ஸ்மிருதி மந்தானா மற்றும் கேப்டன் மித்தாலி ராஜ் பேட்டிங்கில் கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.
இந்தப் போட்டிக்கு பிறகு 10ஆம் தேதி நியூசிலாந்து அணியையும், 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியையும், 16ஆம் தேதி இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்கிறது. அதன்பின்னர் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும், 22 ஆம் தேதி பங்களாதேஷ் அணியையும், 27ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 8 அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதனால் அனைத்து அணிகளும் ஒரு முறை முதலில் மோதுகின்றன. அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறும். இறுதி போட்டி வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற உள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. எனவே இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று இந்திய மகளிர் அணியின் ஜாம்பவான் வீராங்கனை மித்தாலி ராஜ் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் மகளிர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவரை கோப்பையுடன் இந்திய அணி வழி அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்