SL vs SA, Innings Highlight: பரபர கடைசி ஓவர்.. பறந்த சிக்ஸர்... இலங்கையை தட்டித் தூக்கிய தென் ஆப்பிரிக்கா!
உலககோப்பை டி20 தொடரில் சூப்பர் 12 சுற்றில் இலங்கை அணியை தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
![SL vs SA, Innings Highlight: பரபர கடைசி ஓவர்.. பறந்த சிக்ஸர்... இலங்கையை தட்டித் தூக்கிய தென் ஆப்பிரிக்கா! ICC T20 WC 2021: South Africa won the match by 4 wickets against Sri Lanka in Match 25 at Sharjah Cricket Stadium SL vs SA, Innings Highlight: பரபர கடைசி ஓவர்.. பறந்த சிக்ஸர்... இலங்கையை தட்டித் தூக்கிய தென் ஆப்பிரிக்கா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/30/b070f2cd49a3b2e8057e90eb6584c694_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலககோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் குரூப் 1 பிரிவில் தென்னாப்பிரிக்காவும், இலங்கையும் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க பீல்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய இலங்கையின் தொடக்க வீரர் குசல் பெராரா 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அசலங்கா கடந்த போட்டிகளைப் போலவே அதிரடியாகவே ஆடினார். அவர் 14 பந்தில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். அடுத்து வந்த பனுகா டக் அவுட்டாகியும், அவிஷ்கா பெர்ணான்டோ, ஹசரங்கா அடுத்தடுத்து ஆட்டமிழந்ததனர்.
இருப்பினும் மறுமுனையில் தொடக்க வீரர் நிசங்கா அதிரடியாகவே ஆடினார். கடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடாத கேப்டன் சனாகா இந்த முறையும் 11 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கருணரத்னே, சமீராவும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். தொடக்க வீரர் நிசங்கா 8வது விக்கெட்டாக 58 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி, ப்ரெடரியஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர்கள் குயின்டின் டிகாக் 12 ரன்களிலும், ரிஷா ஹென்ட்ரிக்ஸ் 11 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த வான்டெர் டுசென் 16 ரன்களில் ரன் அவுட்டானார். 49 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகுள் விழுந்ததால் தென்னாப்பிரிக்க அணி தடுமாறியது.
4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் தெம்பா பவுமா பொறுப்புடன் ஆடினார். மறுமுனையில் கடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடிய மார்க்ரம் 20 பந்தில் 19 ரன்களில் ஹசரங்கா பந்தில் போல்டானார். 17வது ஓவரில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் பவுமாவும் 46 பந்தில் 46 ரன்களில் வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்தில் ப்ரெடரியசும் டக் அவுட்டாகினார். இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. தனது முந்தைய ஓவரின் கடைசி இருபந்தில் தெம்பா பவுமா, மார்க்ரமை ஆட்டமிழக்க செய்த ஹசரங்கா ப்ரெடரியசையும் ஆட்டமிழக்க செய்ததால் இந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
கடைசி 6 பந்தில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. லஹிரு குமாரா வீசிய முதல் பந்தில் ரபாடா ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தை சந்தித்த டேவிட் மில்லர் ஒரு சிக்ஸரை அடித்து ஆட்டத்தில் மேலும் விறுவிறுப்பை கூட்டினார். லஹிரு குமாரா வீசிய அடுத்த பந்தையும் மில்லர் மைதானத்தின் கூரைக்கு அனுப்பி தென்னாப்பிரிக்காவை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். கடைசியில் 2 பந்தில் ஒரு ரன்கள் தேவை என்ற நிலையில் ரபாடா பவுண்டரி அடித்து தென்னாப்பிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்க அணி 3 போட்டியில் 2 வெற்றி 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 1 வெற்றியுடன் 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)